பா.ஜ.,வுடன் இணைந்தால் விஜயின் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்: திருமா சாபம்
பா.ஜ.,வுடன் இணைந்தால் விஜயின் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்: திருமா சாபம்
ADDED : மார் 16, 2026 06:43 AM

சென்னை: ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், த.வெ.க., தலைவர் விஜய் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்டுகள் கூடுதல் தொகுதிகளை கேட்பதால், கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. பொதுத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்பது ஓரிரு நாளில் தெரியும்.
அ.தி.மு.க., - பா.ஜ., இன்னும் பேச்சு துவக்கவில்லை; கூட்டணி அமைக்கவே, போராடுகின்றனர். கடந்த 2021 தேர்தலில், தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளை இழுக்க முயற்சித்து, தே.மு.தி.க.வை இழந்துள்ளனர்.
தற்போது நடிகர் விஜயின், த.வெ.க,வை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைக்க முயற்சிக்கின்றனர். அழுத்தம் கொடுத்து, விஜயை அடிபணிய வைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்கு விஜய் அடிபணிந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்.
பிரதமர் மோடி, அமெரிக்காவை எதிர்த்து பேசும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தலைவணங்கி அடிபணிவது ஏன், ஏவுகணை வீசி விடுவர் என்ற பயமா? ஆனால், முதல்வர் ஸ்டாலின் துணிச்சலாக பேசுகிறார். அறிவாலயம் மீது ஏவுகணை வீசினால் கூட, அதை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராக இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

