ADDED : டிச 18, 2024 12:45 AM

சென்னை:கருணை அடிப்படையில், பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை கிராம உதவியாளர்கள், சென்னையில், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் பொதுச்செயலர் பி.வி.பாண்டியன் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 15,000 பேர், வருவாய் துறையில் கிராம உதவியாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் வி.ஏ.ஓ.,க்களுக்கு உதவியாக உள்ளனர்.
பணி காலத்தில், கிராம உதவியாளர்கள் இறந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று, 1999ல் கருணாநிதி ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணை, கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான கோப்பு, மனிதவள மேலாண்மை துறையில், கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது.
கடந்த, 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களிடம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக, மாதந்தோறும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஓய்வு பெற்ற, இறந்த கிராம உதவியாளர்களின் குடும்பங்களுக்கு, இதிலிருந்து எந்த பயனும் இப்போது வரை கிடைக்கவில்லை.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக, வருவாய் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது. அதில் ஒப்புக் கொண்டபடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், நேற்று காலை முதல், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.