கிராம உதவியாளர்கள் 'காத்திருப்பு' 27வது நாளாக தொடர்கிறது
கிராம உதவியாளர்கள் 'காத்திருப்பு' 27வது நாளாக தொடர்கிறது
ADDED : மார் 04, 2026 12:51 AM

சென்னை: காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில் 27வது நாளாக கிராம உதவியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள், தங்களுக்கு, நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பிப்., 5 முதல், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 27வது நாளாக, சென்னை எழிலகம் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுச்செயலர் முருகன் கூறியதாவது: வருவாய் துறை உயர் அதிகாரிகளை, நேற்று சந்தித்து பேசினாம். அவர்கள், 'உங்களின் கோப்புகள் அனைத்தையும் நிதித்துறையிடம் அனுப்பி விட்டோம், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை' என்றனர். தொடர்ந்து, 27 நாட்களாக போராடி வரும் எங்களை, நிதித்துறை புறக்கணிப்பது, வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் துறை அலுவலர்கள்
'பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள், வருவாய்த் துறை அலுவலர்கள், நேற்று எட்டாம் நாளாக, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தமிழகம் முழுதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களிலும், வருவாய் துறை அலுவலர்கள், பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அன்றாட அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.
மின்வாரிய பணியாளர்கள்
தமிழக மின் வாரிய பணியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் வழங்கப்படும் ஊதிய உயர்வை, தொடர்ந்து வழங்க வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதையடுத்து, பேச்சு நடத்த 20 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு, மின் வாரியம் நேற்று அழைப்பு விடுத்தது. நேற்று மாலை வரை, 10க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: மின் வாரிய அதிகாரிகள் தினமும் நள்ளிரவு வரை துாங்காமல், மின் வினியோகத்தை கண்காணிக்கின்றனர். எனவே, அதிகாரிகளையும் சேர்த்து, அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கவில்லை என்றால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என, அதிகாரிகள் நடத்திய பேச்சில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

