கிளியாற்றில் சிக்கிய தனியார் பஸ் பயணியரை மீட்ட கிராமவாசிகள்
கிளியாற்றில் சிக்கிய தனியார் பஸ் பயணியரை மீட்ட கிராமவாசிகள்
ADDED : டிச 14, 2024 01:06 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே கிளியாற்று வெள்ளத்தில் தனியார் பஸ் சிக்கிய நிலையில், பயணியரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.
மதுராந்தகம் ஏரிக்கு நெல்வாய் ஆறு மற்றும் கிளியாற்றில் இருந்து நீர் வருகிறது.
7,800 கன அடி
இந்த ஏரியில் பராமரிப்பு மற்றும் துார் வாரி ஆழப்படுத்துதல், கதவணைகளுடன் கூடிய உபரிநீர் போக்கி அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 160 கோடி ரூபாய் செலவில், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அதனால், ஏரிக்கு வரும் நீர் முழுதும், கிளியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, 7,800 கனஅடி தண்ணீர் கிளியாற்றில் செல்கிறது.
இந்நிலையில் நேற்று, பவுஞ்சூரிலிருந்து தச்சூர், ஈசூர், பூதுார் வழியாக செங்கல்பட்டு நோக்கி, 30க்கும் மேற்பட்ட பயணியருடன், தனியார் பேருந்து சென்றது.
அலறல் சத்தம்
அப்போது, பவுஞ்சூர் -- பூதுார் மாநில நெடுஞ்சாலையில், சகாயநகர் அருகே கிளியாற்றை கடந்து செல்ல முயன்ற போது, ஆற்று பாலத்தின் மேற்பகுதியில் அதிகமான தண்ணீர் செல்வதை அறிந்த டிரைவர், பஸ்சை நிறுத்தியுள்ளார். இதில், பஸ் வெள்ளத்தில் சிக்கியதால், பயணியர் கூச்சலிட்டு உள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதிக்கு விரைந்து வந்த சகாயநகர் மக்கள், கயிறு கட்டி பயணியரை பத்திரமாக மீட்டனர்.
பயணியர் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், பஸ் மட்டும் வெள்ள நீரில் சிக்கியுள்ளது.
கிளியாற்றில் அதிகமான நீர் செல்வதால், இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

