அமைச்சர் நிகழ்ச்சியில் ஒலித்த எம்.ஜி.ஆர்., பாடல் நிறுத்த சொன்னதால் கிராம மக்கள் அதிர்ச்சி
அமைச்சர் நிகழ்ச்சியில் ஒலித்த எம்.ஜி.ஆர்., பாடல் நிறுத்த சொன்னதால் கிராம மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 02, 2025 08:28 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம். திருச்செந்துார் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் சட்டசபை தொகுதிகளில் பல்வேறு இடங்களில் அரசு நிகழ்ச்சிகள் நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காங்., - எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழையகாயல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 13 லட்சத்து 57000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும், 8 லட்சத்து 70,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து குழந்தைகளுக்கு சாக்லெட் வழங்கினார்.
அவர் நிகழச்சியில் பங்கேற்க வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.-, மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்த அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற 'காலத்தை வென்றவன் நீ... காவியமானவன் நீ...' என்ற பாடல் ஸ்பீக்கரில் ஒலித்தது.
உடனே, அமைச்சருடன் இருந்தவர்கள், இதை அமைச்சரிடம் சுட்டிக் காட்ட, பாட்டை நிறுத்தச் சொல்லுங்கள் என உத்தரவிட்டார் அமைச்சார்.
இதையடுத்து, பாடல் ஒலிபரப்பியோரை அணுகிய அமைச்சர் ஆதரவாளர்கள், 'என்ன பாட்டு போடுறீங்க; பாட்டை நிறுத்துங்கள்' என கோபத்துடன் கூறினார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பாட்டை நிறுத்தினர்.
கிராம மக்கள் கூறியதாவது:
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஏற்கனவே இப்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது, எம்.ஜி.ஆர்., பாடல்கள் ஒலிபரப்பட்டுள்ளன. அவர் அ.தி.மு.க.,வில் இருந்ததோடு, எம்.ஜி.ஆர்., பாடல்கள் பிடிக்கும் என்பதால் பாடல் ஒலிபரப்பட்டது. ஆதரவாளர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை. பாடலை நிறுத்தச் சொன்னார்கள்; நிறுத்தி விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.