குடிமராமத்து திட்டத்தை நிறுத்தியதால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது :உதயகுமார் குற்றச்சாட்டு
குடிமராமத்து திட்டத்தை நிறுத்தியதால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது :உதயகுமார் குற்றச்சாட்டு
ADDED : டிச 07, 2024 06:47 PM
மதுரை:''மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. பெஞ்சல் புயல் பாதிப்பு ஆய்வில் மத்திய, மாநில அரசுகளின் புள்ளி விபரத்தில் முரண்பாடு உள்ளது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 2011ல் தானே புயல், 2012ல் நீலம், 2013ல் மடி, 2016ல் வர்தா, 2017ல் ஒக்கி, 2018ல் கஜா, 2019ல் பனி, 2020ல் நிவர் புயல்களையும், அதேபோல் சுனாமியையும் ஜெயலலிதாவும், பழனிசாமியும் எதிர்க்கொண்டு மக்களை பாதுகாத்துள்ளார்கள். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை.
அதேபோல், பெஞ்சல் புயல் 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்ததில் சேகரித்த புள்ளி விபரமும், தி.மு.க., அரசு அளித்த புள்ளி விபரமும் முரண்பாடாக உள்ளன. இதன் வாயிலாக தமிழகத்திற்கு நிவாரணம் முழுமையாக கிடைக்காமல் போகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் தி.மு.க., அரசே காரணமாக இருக்கப்போகிறது.
பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி, தமிழகத்தில் நீர் மேலாண்மையில் புரட்சி ஏற்படுத்தினார். ஆனால், அதத்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடு விழா நடத்திவிட்டனர். அதனாலேயே, அனைத்து ஏரிகளும் பாசன கால்வாய்களும் உடைந்து, நீர் வெளியேறி வெள்ளமாக கிராமங்களுக்குள் புகுந்து விட்டது. அதனாலேயே மக்கள் தவியாய் தவிக்க வேண்டியதானது. இப்போது காக்க தவறிய தி.மு.க., அரசு மற்றொரு புயலை எப்படி எதிர்கொள்ள ஆயத்தமாகப் போகிறது.
இவ்வாறு கூறினார்.