திருச்செந்துார் சூரசம்ஹார விழா கார் ‛‛பாஸ்'' வினியோகத்தில் அத்துமீறல்!: கள்ளச்சந்தையில் போலீசாரே விற்பனை செய்தது அம்பல்
திருச்செந்துார் சூரசம்ஹார விழா கார் ‛‛பாஸ்'' வினியோகத்தில் அத்துமீறல்!: கள்ளச்சந்தையில் போலீசாரே விற்பனை செய்தது அம்பல்
UPDATED : அக் 28, 2025 11:55 PM
ADDED : அக் 28, 2025 11:39 PM

துாத்துக்குடி திருச்செந்துார் கோவில் சூரசம்ஹாரம் விழாவில், சிறப்பு கார் பாஸ் வினியோகம் இல்லை என கலெக்டர் அறிவித்தும், திருச்செந்துார் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கையெழுத்திட்ட பாஸ் அச்சடித்து, அத்துமீறி பலருக்கும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தகவல் வெளியாகி உள்ளது.
கலெக்டர், உள்ளூர் அமைச்சர், மாவட்ட எஸ்.பி., என யாருக்கும் தெரியாமல் நடந்துள்ள இந்த பாஸ் வினியோக விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏழு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மழை காரணமாகவும், வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த வாகனங்களுக்கான சிறப்பு பாஸ் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
பொது போக்குவரத்து
இதனால், தனிநபர் வாகனங்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருவிழாவிற்கு வர வேண்டும் என, கடந்த வாரமே மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுஇருந்தார்.
இருப்பினும், நிகழ்ச்சி நடப்பதற்கு, 24 மணி நேரத்திற்கு முன் வந்த கார்களும், வேன்களும், திருச்செந்துார் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன.
இது எப்படி நடந்தது என, கலெக்டர் ஆராய்ந்த போது, திருச்செந்துார் நகர போலீஸ் அதிகாரிகள் கையெழுத்திட்ட கார் பாஸ், பலருக்கும் வழங்கப்பட்ட விவகாரம் தெரிய வந்தது.
உள்ளூர் அமைச்சர், கலெக்டர், அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி, போலீசார் தன்னிச்சையாக பாஸ் அச்சடித்து வினியோகித்திருந்தனர். இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதில், 1000க்கும் மேற்பட்ட பாஸ்களை அச்சடித்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், வெளிநபர்களுக்கும், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்த தகவலும் வெளியாகி உள்ளது. சிலர் அந்த பாைஸ, கலர் ஜெராக்ஸ் எடுத்தும் பயன்படுத்தி உள்ளனர். இதனால் விழா நேரத்தில், வாகன போக்குவரத்து அதிகமாகி, நகரில் நெரிசல் நிலவியது.
டி.எஸ்.பி., கையெழுத்து
போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ள கார் பாஸில் திருச்செந்துார் டி.எஸ்.பி., மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், இன்னோஸ்குமார் ஆகியோரின் கையெழுத்துக்கள் உள்ளன.
திருச்செந்துார் நகரில் உள்ள லாட்ஜ்களுக்கு, அந்த பாஸ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த லாட்ஜ் பெயரையும் அதில் குறிப்பிடவில்லை.
பொதுவாக, சஷ்டி போன்ற திருவிழா காலங் களில், கலெக்டர், எஸ்.பி., கையெழுத்திட்ட கார் பாஸ் அச்சடிக்கப்பட்டு, முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.
அதன் ஒரு பகுதியாக, உள்ளூர் லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குவோர் வாகனங்களுக்காக, அந்த லாட்ஜ் பெயரை குறிப்பிட்டு, பாஸ் வழங்கப்படும்.
அமைச்சர், எம்.எல்.ஏ., அறநிலைய துறை, வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள், தங்கள் தரப்புக்கு, பாஸ் கேட்டு பெறுவர். இந்த வகையில், 1,000க்கும் மேற்பட்ட பாஸ் வினியோகம் ஆகும்.
பாஸ் வாங்கிய வாகனங்கள் நகருக்குள் வரும் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் நேரத்தில், கடும் நெரிசல் ஏற்படும்.
பொதுவாகவே, சூரசம்ஹாரம் நடைபெறும் மாதத்தில் அதிக மழை இருக்கும். மழையால் வாகன நிறுத்துமிட பகுதிகள் சகதியாகி இருந்தால், பாஸ் பெற்று வரும் வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும்.
பாஸ் இல்லை
இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு, அமைச்சர் சேகர்பாபு சொன்னதற்கிணங்க, கலெக்டர் இளம்பகவத், சிறப்பு கார் பாஸ் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால், போலீசார் தன்னிச்சையாக பாஸ் அச்சடித்து வினியோகித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நெரிசலுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது.
தங்கள் துறைக்கு வழக்கமாக தரும் பாைஸ கூட தராமல், போலீசார் தன்னிச்சையாக பாஸ் அச்சடித்து வினியோகித்தது பற்றி, கலெக்டரிடம் முறையிட, கோவில் நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என, பக்தர்களும் கோரிக்கை எழுப்பிஉள்ளனர்.
இது குறித்து எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் கேட்டபோது, 'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை' என்று மறுத்தார்; பின் விளக்கம் கொடுத்தார்.
தேவைக்கு மட்டும் கொடுத்தோம் யாருக்கும் சிறப்பு பாஸ் வழங்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு, நுழைவு பாஸ் வழங்கப்பட்டது. நகரின், 70 லாட்ஜ்களில் அறை முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. அந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட, 'லாட்ஜ் பார்க்கிங்' பகுதிகளில் மட்டுமே நிறுத்தப்பட்டன. முறையாக கணக்கெடுக்கப்பட்டு பாஸ் வழங்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகளின் சில முக்கியமான இயக்கங்களுக்காக, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. சிறப்பு பாஸ் கிடையாது என்பதால் பலர், அத்தியாவசிய பாஸ் கேட்டனர். போலீஸ் கண்டிப்புடன் இருந்ததால் தற்போது குற்றம் சாட்டுகின்றனர். சூரசம்ஹாரத்தின் போது, லட்சக்கணக்கான பக்தர்களை போலீஸ் வெற்றிகரமாக கையாண்டதை மறைக்கும், சில அதிருப்தியாளர்களின் பலவீனமான முயற்சி தான் இது. - ஆல்பர்ட் ஜான் துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,

