திருச்செந்துார் கோவில் பணிகளில் விதிமீறல்? அரசு துறைகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்துார் கோவில் பணிகளில் விதிமீறல்? அரசு துறைகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 23, 2025 12:00 AM
மதுரை:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 'மாஸ்டர் பிளான்' மேம்பாட்டு பணிக்கு, விதிகளை மீறி நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ளப்படுவதாக கூறி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
'ஆலயம் காப்போம்' என்ற அறக்கட்டளையின் தலைவர் ரமணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி, 100 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி மேற்கொள்ள, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை, 2023 ஏப்., 23ல் அரசாணை பிறப்பித்தது; அதன்படி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாணை வெளியிடுவதற்கு முன், பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். பக்தர்களிடம் கருத்து கோர வேண்டும்.
இதை, அறங்காவலர் குழு தான் மேற்கொள்ள வேண்டும். அதன் பரிந்துரை அடிப்படையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
எனவே, கோவிலில் மேற்கொள்ளப்படும் மாஸ்டர் பிளான் பணியை, ரத்து செய்ய வேண்டும்.
மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மாநில தொல்லியல்துறை கமிஷனர், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, பிப்., 13க்கு ஒத்திவைத்தது.
கடலோர ஆராய்ச்சி குழு
திருச்செந்துாரில் ஆய்வு
திருச்செந்துார் கடலோர பகுதிகளில், தேசிய கடலோர ஆராய்ச்சி குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில், 50 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட குழுவினர் நேற்று, கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். இன்று, ட்ரோன் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளால் கடற்கரையில் ஆய்வு செய்ய உள்ளனர்.

