ADDED : ஜன 03, 2024 12:03 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு:
என் நிறுவனமான, 'விஷால் பிலிம் பேக்டரி' தயாரிப்பில், சண்டக்கோழி - 2 உருவானது. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்கம் மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமைக்காக, 2018ல் லைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது; 23.21 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, லைகா செலுத்தவில்லை. அதனால், அபராதத்தையும் சேர்த்து, 4.88 கோடி ரூபாய் செலுத்தினேன். தற்போது, 500 கோடி ரூபாய் செலவில், இந்தியன் - 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
நான் செலுத்திய ஜி.எஸ்.டி., மற்றும் அபராதத்தை, வட்டியுடன் சேர்த்து 5.24 கோடி ரூபாயாக வழங்க வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, லைகா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி அப்துல் குத்துாஸ் விசாரித்தார். மனுவுக்கு பதில் அளிக்க, லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 19க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.