விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள்
விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள்
ADDED : ஜூன் 19, 2025 12:35 AM

சென்னை,:சாகித்ய அகாடமியின் 2025ம் ஆண்டுக்கான பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகளுக்கு, விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் லட்சுமிஹர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கிய நுால்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், சிறுவர்களுக்கான நுால்களுக்கு பால சாகித்யா, இளைஞர்களுக்கான நுால்களுக்கு யுவ புரஸ்கார், மற்ற நுால்களுக்கு சாகித்ய அகாடமி விருது என வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான பால புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளுக்கு, அந்தந்த மொழிக்கு நிறுவப்பட்ட நடுவர் குழு பரிந்துரையை சாகித்ய அகாடமி தலைவர் மாதவ் கவுஷிக் நேற்று டில்லியில் ஆய்வு செய்தார்.
அதையொட்டி நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின், இந்தாண்டுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், விஷ்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சிறுவர் கதைசொல்லி, கவிஞர் என, பன்முகம் கொண்ட விஷ்ணுபுரம் சரவணன் எழுதியுள்ள, 'ஒற்றைச்சிறகு ஓவியா' என்ற சிறுவர் நாவல், தமிழ் மொழிக்கான பால புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து, திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் லட்சுமிஹர் எழுதியுள்ள, 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்பு, யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
டில்லியில் நடக்க உள்ள விழாவில், இவர்களுக்கு தலா 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு, செப்புப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.