ADDED : பிப் 22, 2024 02:28 AM

ரா.ஷண்முக சுந்தரம், அவிநாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டது. அனேகமாக, வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஓட்டுப்பதிவு இருக்கலாம். வழக்கம்போல, தமிழகத்தில், இரு பிரதான கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பணத்தை வாரி வழங்கும் என, பெரும்பாலான தமிழக வாக்காளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த கட்சிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என, ஒரு நிமிடம் கூட சிந்திக்காத தமிழக வாக்காளர்கள், ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் நியாயமாக, மனசாட்சியோடு நடந்து கொள்வர்.
அது... அதிக பணம், பொருள் கொடுக்கும் கட்சிக்கு தன் ஓட்டை செலுத்துவது தான்.
கீழ்க்கண்ட உரையாடல்களை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் காணலாம்:
'ஏம்பா உங்க வீட்டுக்கு காசு வந்துச்சா? எனக்கு அவன் ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்துருக்கான்... இவன், 300 ரூபாய் தான் கொடுத்துருக்கான்... வழக்கம்போல எங்க வீட்ல இருக்குற அஞ்சு ஓட்டுல, மூணு ஓட்டுகளை அவனுக்கும்,ரெண்டு ஓட்டுகளை இவனுக்கும் போடலாம்னு இருக்கேன்...
'எங்க வீட்டில பரம்பரை, பரம்பரையா இந்த சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவோம். ஆனா அந்த கட்சிக்காரன் ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாயை, பேப்பர் போடும்போது வச்சு கொடுத்துட்டான்... இந்த கட்சிக்காரன் வழக்கம் போல, 300 ரூபாய் தான் மளிகை கடையில டோக்கன் வழியா தரான்...
'என்ன தான் அவனுக கொள்ளை அடிச்ச பணமா இருந்தாலும் நியாயமா, மனசாட்சிப்படி நடந்துக்கணும்னு பார்க்குறேன். அதனால, இந்த முறை எங்க குடும்பத்து ஓட்டுகள், அதிகமா காசு கொடுத்த அந்த கட்சிக்காரனுக்கு தான் பா...'
கண்டிப்பாக, மேற்கண்ட நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்து விட வேண்டாம். யாரும் பணம் கொடுக்க முன்வந்தால், 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என, முகத்தில் அடித்தாற்போல சொல்லி மறுத்து விடுங்கள்.
அதையும் மீறி, பால் பாக்கெட், பேப்பர் போடும் போது, பணம் வைத்து கொடுத்து விட்டால், அந்த பணத்தை அருகில் உள்ள கோவில் உண்டியலில் போட்டு, உங்கள் மனசாட்சிப்படி, உங்கள் தொகுதிக்கு யார் நல்லது செய்வர் என தோன்றுகிறதோ, அவருக்கு ஓட்டளியுங்கள். அப்போது தான், ஜனநாயகம் காப்பாற்றப்படும்.