நாடு முன்னேற பொறுப்புள்ள கட்சிக்கு ஓட்டு அளியுங்கள்: நிர்மலா சீதாராமன்
நாடு முன்னேற பொறுப்புள்ள கட்சிக்கு ஓட்டு அளியுங்கள்: நிர்மலா சீதாராமன்
UPDATED : மார் 16, 2024 08:43 PM
ADDED : மார் 16, 2024 08:23 PM

சென்னை:நாடு முன்னேற பொறுப்புள்ள கட்சிக்கு ஓட்டு அளியுங்கள் என சாணக்யா யூடியூப் சேனலின் 5 ஆம் ஆண்டுவிழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்
சாணக்யா யூடியூப் சேனலின் 5 ஆம் ஆண்டுவிழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் அமமுக தலைவர் தினகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேல் 45 சதவீதத்திற்கும் மேல் ,மாற்றுத்திறனாளிகள். அவர்கள் வீட்டிற்கு சென்று வாக்குபதிவு செய்ய வேண்டும். நான் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக பேசுகின்றேன். நீங்கள் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகின்றேன் என நினைக்கிறீர்கள்
சமஜ்வாடி, தெலுங்குதேசத்திற்கு சைக்கிள் சின்னம் உள்ளது போல் இங்கேயும் சைக்கிள் சின்னம் உள்ளது. 5 ஆண்டுகளுக்குமேல் மத்திய அமைச்சராக இருந்த வாசன் மீது எந்த வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பாண்டே கூறியதாவது:பாஜக 25 சதவீத வாக்கை பெற்றால் 2026க்கு முன்னரே தமிழ்நாட்டில் பாஜ, ஆட்சி உறுதி.தேர்தல் பத்திரங்கள் என்பது வெள்ளைப்பணம்; கருப்பு பணம் அல்ல.தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக வாங்கியது ரூ.6 ஆயிரம் கோடி, எதிர்கட்சிகள் எல்லாம் வாங்கியது 11,ஆயிரம் கோடி. எது பெரியது என்று நான் கேள்வி கேட்க வேண்டியது இல்லை என்றார்.
மத்திய அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் 5 வது ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் என சாணக்யா யூடியூப் சானலின் ரங்கராஜ் பாண்டே வரவேற்று பேசினார்.
ஜி.கே. வாசன் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பின் பல்வேறு வேலைகளுக்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமைக்குரிய செயலாகும். இன்றைய ஜிடிபி நிலை நாளைய பொருளாதார வளர்ச்சிக்கு பெருமை. கோவிட் காலம் முதல் இன்றுவரை 80 கோடி மக்களுக்கு ரேசன் அரிசி அளித்து வறுமையை போக்கியவர்.
கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான திட்டங்களை வகுத்தவர். பொதுமக்களின் குறைதீர்க்கும் கடிதம் உண்மையாக இருந்தால் உபசரிப்புடன் நடவடிக்கை எடுப்பார். நிதியமைச்சரின் வருகை சாணக்யாவின் வளர்ச்சிக்கு சான்று.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அமமுக கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார் தினகரன். ஊடகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்று சிறந்த பிரதமராக நரேந்திர மோடி இருப்பதற்கு மத்திய அரசின் சாதனைகளே எடுத்துக்காட்டு என்றார்.
தினகரன் பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிறகு இது இரண்டாவது நிகழ்ச்சியாகும். மோடி 3வது முறை வெற்றி பெற்று பிரதமராவார். மத்திய திட்டங்களின் வெற்றிக்காக, தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வெற்றி தருவார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 முறை நிதிநிலை அறிக்கை அளித்து பெருமை சேர்த்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று முலை முடுக்கிலும் இருக்கின்ற போதை பொருட்களை நுழைய விட்டுருக்க மாட்டார். சட்டம் ஒழுங்கை முறையாக கையாண்டார். பிரதமர் மோடிக்கு அருகில் இருந்து உலகிலேயே இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. என்டிஏ கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறேன் என்று கூட்டணி உறுதியாவது முன்பே சொல்லியிருந்தேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று, மத்திய அமைச்சர்கள், முருகன், கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடன் தெரிவித்துள்ளேன். மக்கள் பொய் பிரச்சாரங்களை நம்ப மாட்டார்கள். ஆர்.கே.நகர் மக்கள் என்னை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இஸ்லாமியர் துணையோடு இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வைப்போம் என்றார்.
நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
சிறுவயதில் பிரிண்ட் மீடியாவிலிருந்துதான் அரசியல் கருத்துக்கள் சமூக கருத்துக்கள் தெரிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் கூட்டத்திலும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம். அந்த காலகட்டம் கடந்து தற்போது டிவி மற்றும் யூடியூப் சானல்கள் மூலம் செய்திகளை அறிந்து கொள்கிறோம். அரசியல், சமூக, பொருளாதார, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை சமூக ஊடகங்கள் விரிவாக சொல்கின்றன. பிரதமர் மோடி, பாரத நாடு முன்னேறனும் நாட்டு மக்களும் முன்னேறனும் என பாடுபடுகிறார். சிலர் அதை திருப்பி விடுகின்றனர்.
பிரதமரை திரும்பத்திரும்ப கேள்வி கேட்கும் நிலையில் எதிர்கட்சிகளையும் கேளுங்க. 10 ஆண்டுகளில் ஒரு ஊழல் கூட இல்லை. என்னால என்ன பண்ணமுடியும் என்பதுதான் கொள்கை. அதை தெளிவாக மீடியாக்கள் கொண்டு செல்ல வேண்டும். பொறுப்போடு உள்ள ஒரு கட்சியாக இருந்தால் நாம் கீழ்த்தனமாக பேசுவோமா. எந்த மதத்தை ஆதரிக்கிறீங்க எதை அழிக்கபோறீங்க. எல்லா மதத்தையும் ஒழிக்கனும் சொல்லுங்க பார்ப்போம். ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி ஆளுமைக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களது எண்ணம்.
தமிழ்நாட்டில் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது முக்கியம். போதைப்பொருட்கள் அதிகம் பரவி உள்ள திராவிட மாடல் அரசுக்கு ஓட்டுவீர்களா என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டபோது போடமாட்டோம்னு என்றனர். எந்த ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கெட்பெயர் வந்துள்ளதோ அதை அகற்ற வேண்டும். நமக்கு பொறுப்பு வேண்டும். பொறுப்போடு உள்ள கட்சிக்கு ஓட்டுபோட்டால்தான் நாட்டிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
எதிர்கட்சிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன செய்துள்ளன. ராஜஸ்தான், கர்நாடகாவில் காங்கிரஸ் என்ன செய்துள்ளது. பிரதமர் மோடி தமிழைப்பற்றி பேசாத இடமே இல்லை. தமிழ்நாட்டை முன்னேற்ற, மத்திய அரசு நல்ல அரசு அமைய பாஜக வாக்களியுங்கள். ஆன்மிகத்தையும் தேசியத்தை வளர்க்கும் கட்சிக்கு ஓட்டு அளியுங்கள். நாடு முன்னேற ஒவ்வொருவரும் ஓட்டு கேளுங்கள். இ்வவாறு பேசினார்.

