ஒன்றுக்கும் மேற்பட்ட ஊரில் ஓட்டு: ஐ.ஏ.எஸ்.,களும் விலக்கல்ல
ஒன்றுக்கும் மேற்பட்ட ஊரில் ஓட்டு: ஐ.ஏ.எஸ்.,களும் விலக்கல்ல
ADDED : ஆக 05, 2025 02:37 AM

பீஹாரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. புலம் பெயர்ந்தவர்களில், சாதாரண குடிமகன் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வரை அனைவரும், சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதை விரும்பாததே, இப்பிரச்னைக்கு காரணமாகிறது.
பீஹார் மாநிலத்தில், அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. இதில், 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள, 36 லட்சம் பேரும் அடங்குவர்.
அவர்கள் தற்போது உள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதேநேரம், பீஹாரில் நடந்ததுபோல், நாடு முழுதும் ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களில் ஒன்றை தவிர்த்து, மற்றவற்றை நீக்கினால், வாக்காளர் பட்டியல் சீராகும்.
பெயர்கள் நீக்கம் இதுகுறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் தேர்தல் வரும் நேரத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்படுகின்றன.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள், ஒரு வாக்காளர் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் கண்டுபிடிக்கும். அதன் அடிப்படையில், அந்த வாக்காளரை தொடர்பு கொண்டு, அவர் விரும்பும் இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது.
இப்பணி தற்போது, அந்தந்த மாநிலத்திற்கு உள்ளே மட்டும் நடக்கிறது. இதை நாடு முழுதும் ஒப்பிட்டு பார்த்தால், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு இடத்தில் மட்டும் பெயர் இருக்க முடியும். இதன் வழியே வாக்காளர்கள் எண்ணிக்கை குறையும்; முறைகேடுகளை தடுக்க முடியும்.
புலம் பெயர்ந்தவர்கள் தற்போது இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என, 10 லட்சம் பேரை நீக்கினால், அடுத்த முகாம்களில் மீண்டும், 10 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. வாக்காளர் பட்டியலை குறை கூறும் அரசியல் கட்சியினரே, போலி நபர்களை சேர்க்கின்றனர்.
புலம் பெயர்ந்தவர்கள், தங்களின் சொந்த ஊரிலேயே, வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். எனவே, அவர்கள் குடியேறிய ஊர்களில், தங்கள் பெயரை சேர்த்தாலும், சொந்த ஊரில் நீக்க விரும்புவதில்லை.
சாதாரண மக்கள் மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக உள்ளவர்களும், தங்கள் சொந்த ஊர் மற்றும் வசிக்கும் ஊரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர்.
சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் இருந்து, தங்கள் பெயரை நீக்க விரும்புவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைத்தால், பெருமளவில் தவறுகளை தவிர்க்க முடியும். இதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் - .

