வாக்காளர் கணக்கெடுப்பு பணி இறுதி கட்டம்; முகவரி மாறியவர்களை தேடும் பணி தீவிரம்
வாக்காளர் கணக்கெடுப்பு பணி இறுதி கட்டம்; முகவரி மாறியவர்களை தேடும் பணி தீவிரம்
ADDED : நவ 19, 2025 06:11 AM

சென்னை: வாக்காளர் கணக்கெடுப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முகவரி மாறியவர்களை அடையாளம் காணும் பணியை, தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. இது தவிர, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டு வைத்திருப்போரும் உள்ளனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி, வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட, வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில், 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6.07 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட 83 லட்சம் கணக்கெடுப்பு படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில், இன்னும் படிவம் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் 94.7 சதவீதம் கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. முகவரி மாறியவர்களை, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
படிவம் கிடைக்காதவர்கள், முகவரி மாறியவர்கள், எந்தவித பதட்டமும் அடைய வேண்டாம். அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 23ம் தேதி உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அங்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது உள்ளிட்ட உதவிகளைப் பெறலாம்.
முதல் முறை ஓட்டளிக்க உள்ள, 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை சேர்க்க, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவம், இறந்தவர்கள் பெயரை நீக்க, படிவம் 7 வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம்.
முகவரி மாறியவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

