வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஹிந்து முன்னணி வரவேற்பு
வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஹிந்து முன்னணி வரவேற்பு
ADDED : அக் 29, 2025 06:49 AM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் காலத்தின் கட்டாயம். இதனை சில கட்சியினர் எதிர்ப்பது அறிவீனம் என ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியில் தீவிர திருத்தப் பணியில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறிந்து நீக்கப்பட்டனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்கள் நீக்கப்பட்டனர். தவறான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும் உண்மையான வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்குவதும் ஜனநாயக விரோதம். இதுபோல பல இடங்களில் பல லட்சம் உண்மையான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்ட செய்திகள் வந்தன. இந்த தீவிர சரிபார்ப்பு காலகட்டத்தில் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை கவனிப்பதும் கூட மக்களின் கடமை. வாக்காளர் பட்டியல் பணி செய்வது மாநில அரசு ஊழியர்கள். இதில் முறைகேடு புகார் வரும் போது,தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தவறு செய்வோ ர் மத்தியில் அச்சம் ஏற்படும்.வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடப்பது வழக்கமான நடவடிக்கை.
சில அரசியல்கட்சிகள் எதிர்க்கக் காரணம் ஊடுருவல்காரர்கள் மற்றும் முறைகேடுக்கு உதவும் போலி வாக்காளர்கள் தான்.ஏராளமான சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்கள் போலி ஆவணம் வாயிலாக ஓட்டுரிமை பெற்றிருந்தது தெரிந்தது. பீஹார் மாநிலத்தில், தீவிர சரிபார்ப்பு முகாம் வாயிலாக, அத்தகைய வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் தான் ராகுல், 'ஓட்டு திருட்டு' என்றார். தமிழகத்தில் கிராமம் வரை வங்கதேச சட்டவிரோத கும்பல் ஊடுருவியுள்ளது. இது குறித்து தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
சமீபத்தில் கைதான இது போன்ற நபர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தப்பியோடி விட்டனர். தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, போலி வாக்காளர்கள், ஊடுருவல்காரர்கள் ஓட்டுரிமை பெறுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

