ADDED : நவ 08, 2025 06:01 AM

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 2004ம் ஆண்டுக்கு பின், இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
முதற்கட்டமாக, டிசம்பர் 4 வரை வீடுதோறும் சென்று, வாக்காளர் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆனால், வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
துவங்கவில்லை சில இடங்களில் வாக்காளர்களுக்கு, இரண்டு முறை படிவம் வழங்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில் படிவம் வினியோகம் செய்யும் பணியே துவங்கவில்லை; வாக்காளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆளும் கட்சி நிர்வாகிகளிடம், மொத்தமாக படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
படிவம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை என காரணம் கூறப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு மேம்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலியை, இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
பயிற்சி தாமதம் இதை காரணம் காட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி தாமதமாகி வருகிறது.
இவ்வாறு, கணக்கெடுப்பு நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், வாக்காளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் நேரடியாகவும், கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் விளக்கங்களை பெற முடியவில்லை என்றும், வாக்காளர்கள் தரப்பில் புகார் சொல்லப்படுகிறது.

