ADDED : செப் 18, 2024 10:05 PM
சென்னை:ஆட்சி பொறுப்பை தி.மு.க., ஏற்கும்போதே, முதல் முறை எம்.எல்.ஏ.,வான உதயநிதி, அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அப்போது, அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. அடுத்து சில மாதங்களில், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என, இளைஞரணியினர் மட்டுமின்றி, அமைச்சர்களும் பேசத் துவங்கியதும், அவர் அமைச்சராக்கப்பட்டார்.
இப்போது, அடுத்த பதவி உயர்வாக, அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆளும்கட்சிக்குள் ஒலிக்கத் துவங்கி உள்ளது. மூத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை காரணமாக, முதல்வர் தயங்குவதாகவும் தகவல் வெளியானது.
கடந்த மாதம் 9ம் தேதி நடந்த அரசு விழாவில், 'ஆக., 19ம் தேதிக்கு பின், உதயநிதி துணை முதல்வர்' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் சொன்னதும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்த மாற்றம் நிகழலாம் என பேசப்பட்டது; அதுவும் நடக்கவில்லை.
சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது. அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், மீண்டும் அதை கிளப்ப, ஆளும்கட்சி வட்டாரம் முழுதும் அது பற்றிக் கொண்டுள்ளது.
உதயநிதியை துணை முதல்வராக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளதாக, நேற்று காலையில் இருந்தே தகவல்கள் பரவின. அதற்கு வலுசேர்க்கும் வகையில், அறிவாலயத்தில் மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டமும், முதல்வர் தலைமையில் நடத்தப்பட்டது.
அந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னும், அந்த பேச்சும் வதந்தியும் நீடித்ததே தவிர, அறிவாலயத்தில் இருந்து அதற்கான அறிவிப்பு வரவில்லை. மாறாக, கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து, தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டத்தை, வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடத்துவது குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது.
எப்படியும் உதயநிதியை துணை முதலராக்கும் அறிவிப்பு வெளியாகி விடும்; கொண்டாடலாம் என்ற எதிர்பார்ப்போடு, வெடியோடு அறிவாலயத்தில் கூட்டியிருந்த கட்சியின் இளைஞரணி தொண்டர்கள், சோகமாகினர்.
'பிரதமை என்பதால், நேற்று அறிவிப்பு வெளியாகவில்லை; இன்று வரலாம்' என்று, நம்பிக்கையோடு அவர்கள் அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.