போதை பொருட்களுக்கு எதிரான போர்; '1933' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
போதை பொருட்களுக்கு எதிரான போர்; '1933' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
UPDATED : ஜூன் 14, 2025 08:06 AM
ADDED : ஜூன் 14, 2025 05:26 AM

சென்னை,: 'போதைப் பொருட்களுக்கு எதிரான போர்' என்ற பெயரில், அதிரடி நடவடிக்கை எடுத்து வரும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், போதைப் பொருட்கள் தொடர்பாக, '1933' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, ஒடிசா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இருந்து, அதிக அளவில், கஞ்சா, கோகைன், ஹெராயின், ஆம்பெட்டமைன், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதற்கான நுழைவு வாயிலாக தமிழகம் மாறி விட்டது. இதைக் கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகளின், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 'போதைப் பொருட்களுக்கு எதிரான போர்' என்ற பெயரில், போதை தடுப்பு நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
சிந்தட்டிக் எனப்படும், மெத் ஆம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், கோகைன் போன்ற போதைப் பொருட்கள் கடத்தலில், பொலிவியா, நைஜீரியா, பிரேசில், ரஷ்யா, இலங்கை, தென் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தோர் அதிகம் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும், 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆந்திரா, ஒடிசா மாநில எல்லைகளில் பயிரிடப்படும் கஞ்சாவுக்கும், இலங்கையில் அதிக வரவேற்பு உள்ளது.
கடந்த ஆண்டில் கிலோ, 50,000 ரூபாய் என விற்கப்பட்ட, 1,582 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம். பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது சாத்தியம் இல்லை. அதற்காக, 'போதைப் பொருட்களுக்கு எதிரான போர்' என்ற அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளோம்.
எனவே, பொதுமக்கள் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கல் குறித்து, 1933 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்; ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.