சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு வார்டன்? நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு!
சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு வார்டன்? நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு!
ADDED : நவ 08, 2024 11:06 PM
சென்னை:சீருடை பணியாளர்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்துகின்றனரா என்பதை விசாரித்து, சிறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர் பெருமாள் என்பவரின் மனைவி சுஜாதா தாக்கல் செய்த மனு:
கடந்த ஆண்டு ஏப்ரலில், என் கணவர் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரே ஒரு கழிப்பறை
மத்திய சிறையின் ஒரு பிளாக்கில், 300 பேர் தான் இருக்க முடியும்; ஆனால், 950 பேரை அடைத்துள்ளனர். ஒரு அறையில், 20 பேர் மட்டுமே இருக்க முடியும்; அங்கு, 60 பேரை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது.
இதனால், சிறைவாசிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. என் கணவர் தொடர்ந்து அந்த சிறையில் இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரை சிறைக்குள் குறைவான நபர்கள் இருக்கும் பகுதிக்கு மாற்றக்கோரி, நான் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் எம்.ராதாகிருஷ்ணன், எம்.புகழேந்தி, அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
புழலில் உள்ள இரண்டாவது சிறையில், 203 வார்டன் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; ஒரு ஷிப்ட்டில், 60 வார்டன்கள் என, மூன்று ஷிப்ட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால், ஒரு ஷிப்ட்டில், 15 வார்டன்கள் தான் உள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் அவர்கள் பணியாற்றுவதால் விரக்தி ஏற்பட்டு, அவர்களுக்கும், சிறைவாசிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. ஒரு ஷிப்ட்டில் பணியாற்றும் 15 வார்டன்கள் தவிர்த்து, மற்றவர்கள், டி.ஜி.பி., - ஐ.ஜி., - டி.ஐ.ஜி., - எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., ஜெயிலர்களின் வீடுகளில் பணியாற்றுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டு வேலையில் சீருடை பணியாளர்களை ஈடுபடுத்துவது, சிறை நிர்வாகத்தில் உள்ள குறைபாட்டை காட்டுகிறது.
அரசு ஊழியர்களை, பொது நலனுக்காகத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்காக பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், இந்த நடைமுறை முற்றிலும் நீக்கப்படவில்லை.
நடவடிக்கை
எனவே, உளவுத் துறையினரிடம் தகவல் பெற்று, விரிவான விசாரணை நடத்தி, சீருடை பணியாளர்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக, உள்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் ஊழியர்களை வாபஸ் பெற்று, சிறை விதிகளின்படி, அவர்களை சிறையில் உள்ள பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
மூன்று வாரங்களில் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை, வரும் 29ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.