UPDATED : ஏப் 25, 2024 01:48 PM
ADDED : ஏப் 24, 2024 11:16 PM

புதுடில்லி :'தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், அடுத்த ஐந்து நாட்கள் கடுமையான அனல் காற்று வீசும்; பொது மக்கள் பகலில் வெளியே நடமாட வேண்டாம்' என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர். இந்நிலையில், 'அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், மஹாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீஹார் ஆகிய மாநிலங்களில் நான்கு டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீசும்' என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 15, 16 தேதிகளில் மும்பையில் 41 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், மீண்டும் அங்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், கடந்த 22ம் தேதி 43.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவான சூழலில், இன்று முதல் நான்கு டிகிரி வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் இடியுடன் மழை பெய்தது. ஆனாலும், வரும் நாட்களில் இங்கு வெப்பம் அதிகரிக்கும் என்கிறது வானிலை மையம். ''அடுத்த மூன்று நாட்களில் டில்லியில் 38 டிகிரி வரை பதிவாகும். நாட்டின் கிழக்கு பகுதிகளில் சில இடங்கள் 44 டிகிரியை எட்டியுள்ளது. வரும் நாட்களில் கிழக்கு முழுதும் 44 டிகிரியை எட்டும்'' என மையத்தின் விஞ்ஞானி நரேஷ் குமார் தெரிவித்தார்.
அனல் காற்றில் இருந்து தப்ப, பொது மக்கள் கவனமுடன் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது. “அடுத்த ஐந்து நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும். பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே நடமாட வேண்டாம். இந்த வேளையில் கடுமையான வேலைகளை செய்ய வேண்டாம். அடிக்கடி தண்ணீர் அருந்துங்கள். வெளியே சென்றால் தொப்பி அல்லது குடை பயன்படுத்துங்கள். வெளிர் நிற, தளர்வான, பருத்தி ஆடை அணியுங்கள்” என கூறியுள்ளது.
13 தமிழக மாவட்டங்களுக்கு வெப்ப அலை 'அலெர்ட்'
தமிழகத்தில் 13 உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் அந்த மாவட்டங்கள். இங்கெல்லாம் 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை பதிவாகும். தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும்.
நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக வேலுார் மற்றும் ஈரோட்டில் 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. மதுரை நகரம், பாளையங்கோட்டை 38; மதுரை விமான நிலையம் 40; சென்னை மீனம்பாக்கம், கோவை, தஞ்சாவூர் 39; திருச்சி 40; திருத்தணி, தர்மபுரி, கரூர் பரமத்தி, சேலம், திருப்பத்துார் 41 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.

