திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க., குறித்து கலெக்டர் பொய் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க., குறித்து கலெக்டர் பொய் அறிக்கை
UPDATED : பிப் 07, 2025 05:46 AM
ADDED : பிப் 07, 2025 04:04 AM

மதுரை : ''மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., பங்கேற்காத நிலையில், 'அ.தி.மு.க., பிரதிநிதி கையெழுத்திடவில்லை' என கலெக்டர் சங்கீதா பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா, நகர் செயலாளர் செல்லுார் ராஜூ எச்சரித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இதுவரை நடந்தது குறித்து நேற்றுமுன்தினம் கலெக்டர் சங்கீதா அறிக்கை வெளியிட்டார். அதில், ஜன.30 ல் திருமங்கலம் ஆர்.டிஓ., தலைமையில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் 'திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள வழிபாடு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம். இதில் வெளிநபர் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்' என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இதில் அ.தி.மு.க., பிரதிநிதி கையெழுத்திடவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
இதை அறிந்த ராஜன்செல்லப்பா உடனடியாக கலெக்டர் சங்கீதாவை தொடர்பு கொண்டு 'நாங்கள் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் 'கையெழுத்திடவில்லை' என எப்படி தெரிவித்தீர்கள். மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடுங்கள்' எனக்கேட்க 'விசாரிக்கிறேன்' என கலெக்டர் கூறினார். ஆனால் மறுப்பு அறிக்கை வெளியிடாத நிலையில் நேற்று காலை ராஜன்செல்லப்பா, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.,வினர் கலெக்டரை சந்தித்து மறுப்பு தெரிவிக்ககோரி மனு அளித்தனர். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வழக்கு தொடருவோம்
பின்னர் நிருபர்களிடம் ராஜன் சொல்லப்பா கூறியதாவது:
அ.தி.மு.க., ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆளுங்கட்சி துாண்டுதலால் தவறான தகவலை கலெக்டர் தந்துள்ளார். அதை திரும்ப பெற வேண்டும். கலெக்டரின் அறிக்கையை செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் உளவுத்துறை சேர்ந்து வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. கலெக்டர் மறுப்பு தெரிவிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வான என்னை அழைக்கவில்லை.
நான் மலை விவகாரத்தில் ஒதுங்கி இருப்பதாக கூறுகிறார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகளில் இப்பிரச்னை எழும்போதெல்லாம் உள்ளூர் மக்களுடன் இணைந்து தீர்வு கண்டேன். தற்போது சிலரின் துாண்டுதலால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதன் உத்தரவை பொறுத்தே அ.தி.மு.க., நிலைப்பாடு இருக்கும். இவ்வாறு கூறினார்.
கலெக்டர் பலிகடா
செல்லுார் ராஜூ கூறியதாவது: தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக தி.மு.க., அரசு செயல்படுகிறது. நிர்வாக ரீதியாக அரசும், மாவட்ட நிர்வாகமும் தோல்வி அடைந்து விட்டது.
அ.தி.மு.க., பிரதிநிதி கையெழுத்து விவகாரம் குறித்து கலெக்டரிடம் கேட்டபோது 'ஆர்.டி.ஓ.,' தெரிவித்ததாக கூறினார். ஆர்.டி.ஓ.,விடம் கேட்டால் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி செயலாளர் கூறியதாக தெரிவிக்கிறார். நவாஸ்கனி எம்.பி., திருப்பரங்குன்றத்திற்கு வந்ததால்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும், எதிலும் கவனம் செலுத்தாமலும் சப்பை கட்டு கட்டுகிறது. இப்பிரச்னையில் கலெக்டரை பலிகடாவாக்கி உள்ளனர். இவ்வாறு கூறினார்.