ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதுாறு 'யுடியூபர்'களுக்கு எச்சரிக்கை
ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதுாறு 'யுடியூபர்'களுக்கு எச்சரிக்கை
ADDED : நவ 24, 2024 02:33 AM
சென்னை:அவதுாறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படியும், தவறினால் வழக்கு தொடர நேரிடும் எனவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
தன் கணவரை விட்டு பிரிவதாக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு அறிவித்திருந்தார். இதுகுறித்து, ரஹ்மான் தரப்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக செய்திகள் பரவின.
இந்த ஆட்சேபகரமான, அவதுாறான கருத்துக்களை, 24 மணி நேரத்துக்குள் நீக்கும்படி, சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
'யுடியூபர்'கள் மற்றும் சமூக வலைதளங்கள் அவதுாறான செய்திகளை பரப்புகின்றன. பொய்யான, கற்பனையான கதைகளை கண்டுபிடித்து எழுதுகின்றனர். சிலரது பேட்டிகளும் வெளியாகி உள்ளன. இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. மலிவான விளம்பரத்துக்காக, ஏ.ஆர்.ரஹ்மானை அவதுாறு செய்கின்றனர். 24 மணி நேரத்துக்குள், அவதுாறான கருத்துக்களை சமூக வலைதளங்களில், யுடியூப் தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.