ADDED : மார் 18, 2025 05:32 AM
சென்னை; கஞ்சா வழக்கில், ஓராண்டாக சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத திருவண்ணாமலை மாவட்ட டி.எஸ்.பி., சுரேஷ் சண்முகத்துக்கு, ஜாமினில் வெளிவரக்கூடிய, 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில், 2019ம் ஆண்டு டூ -- வீலரில் கஞ்சா கடத்தியதாக, காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை சி.வி.எம். நகரைச் சேர்ந்த சதீஷ், 20, காமராஜர் நகரை சேர்ந்த பரத், 19 ஆகியோரை, விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, தலா, 10 கிராம் எடையுள்ள, 150 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க, விசாரணை அதிகாரியாக இருந்த அப்போதைய விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகத்துக்கு, பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
ஓராண்டாக ஆஜராகாத சுரேஷ் சண்முகத்துக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய, 'வாரன்ட்' பிறப்பித்து, அவரை வரும், 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
சுரேஷ் சண்முகம், தற்போது திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருகிறார்.