ADDED : ஜன 01, 2025 04:41 AM
சென்னை : வீடு ஒப்படைப்பு தாமதமான வழக்கில், இழப்பீடு அளிக்காத கட்டுமான நிறுவனத்துக்கு, 'வாரன்ட்' பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில், 'பசிபிகா இன்பிராஸ்டிரக்சர்' என்ற நிறுவனம் சார்பில், 'பசிபிகா ஆரம்' என்ற பெயரில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், வீடு வாங்க, மோகன் குமார், ஜெயலட்சுமி என்ற இருவர் பணம் செலுத்தினர். இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து, இருவரும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.
வழக்கை விசாரித்த ஆணையம், அவர்களுக்கு கட்டுமான நிறுவனம் இழப்பீடு அளிக்க வேண்டும் என, 2024 ஏப்ரல், 8 ல் உத்தரவிட்டது. கட்டுமான நிறுவனம் இழப்பீடு தராத நிலையில், இந்த வழக்கு மீண்டும் ஆணையத்தின் விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
வீடு தாமதமானதால் இழப்பீடு அளிக்க, கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், ஆணையத்தின் உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை.
எனவே, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக, வருவாய் மீட்பு சட்டத்தின்படி, 'வாரன்ட்' பிறப்பித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதே நிறுவனத்தின், 'ஆரம் டவுன்ஷிப்' திட்டத்தில், வீடு ஒப்படைக்காதது குறித்து, சுபலட்சுமி, ஜெயராஜ், கணேஷ் குமார், ஜோதி ஆகியோர் ஆணையத்தில் முறையிட்டனர். அவர்களுக்கும் அந்த கட்டுமான நிறுவனம் இழப்பீடு தராமல் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த, ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி,' அந்த நிறுவனத்துக்கு எதிராக, 'வாரன்ட்' பிறப்பித்து இழப்பீட்டை வசூலிக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்' என்று உத்தரவிட்டார்.