போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதா? நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்க துறை கிடுக்கிப்பிடி
போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதா? நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்க துறை கிடுக்கிப்பிடி
ADDED : நவ 12, 2025 01:49 AM

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர், கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் நண்பர்களுக்கு விற்றது தொடர்பாக, கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரது பின்னணியில், சர்வதேச போதை பொருள் கும்பல் இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த மென்பொறியாளர் பிரதீப்குமார் தான், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட நடிகர், நடிகையருக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்.
பிரதீப்குமாரை, அ.தி.மு.க., நிர்வாகியாக இருந்த அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் இயக்கி உள்ளனர் என்பதும், நடிகர், நடிகையர் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அவர்களை கைது செய்யாமல் இருக்க, தனிப்படை போலீசாருக்கு, 50 லட்சம் ரூபாய் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு எஸ்.ஐ.,க்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, அக்., 29ம் தேதி, நடிகர் கிருஷ்ணா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு, அமலாக்கத்துறைக்கு ஸ்ரீகாந்த் கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து, நவ., 11ம் தேதி ஆஜராக வேண்டும் என, மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதை ஏற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்தனர். அவரின் வாக்குமூலத்தை, 'வீடியோ' பதிவு செய்தனர்.

