கதவணையில் ஷட்டர்கள் இயங்காததால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது!
கதவணையில் ஷட்டர்கள் இயங்காததால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது!
ADDED : நவ 04, 2024 10:08 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் சாலையில், கரட்டுமேடு அருகே, பவானி ஆற்றின் குறுக்கு பவானி இரண்டாவது கதவணை கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட, தீ விபத்தால், சில ஆண்டுகளாக மின் உற்பத்தி நிலையம் செயல்படாமல் இருந்தது. தற்போது ஒரு மின் உற்பத்தி நிலையம் மட்டும் செயல்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக குன்னூர் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கதவணையில் ஆறு ஷட்டர்களும் மூடப்பட்டிருந்ததால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியது. கதவணையின் உயரமான, 30 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால், ஆறு ஷட்டர்களின் மேல், தண்ணீர் வழிந்து சென்றது.
பவானி ஆற்றில் தண்ணீரின் தேக்கம் அதிகமானதால், ஆற்றின் கரையோரம் உள்ள ராமசாமி நகர் இந்திரா நகர் ஸ்ரீரங்க ராயன் ஓடை ஆகிய பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கதவணையில் ஷட்டர்களை, மின் துறையினர் சரியாக பராமரிக்காததால், ஆறு ஷட்டர்களும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். தகவலை அறிந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி ஆகியோர் உடனடியாக கதவணை பகுதிக்கு வந்து, தனியார் ஆட்களை வைத்து ஷட்டர்களை திறக்க ஏற்பாடு செய்தனர்.
ஒரு ஷட்டர் மட்டுமே சிறிதளவு திறக்க முடிந்தது. அணையில் தண்ணீர் குறைந்ததால், குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி இருந்த தண்ணீர் குறையத் துவங்கியது.