ADDED : மார் 17, 2025 02:05 AM

கடமலைக்குண்டு: மழையின்றி கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தேனிமாவட்டம் வருஷநாடு மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகள் இணைந்து மூல வைகை ஆறாக வாலிப்பாறை, முறுக்கோடை, தும்மக்குண்டு, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார், குன்னுார் வழியாக வைகை அணை சென்றடைகிறது.
அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் கடந்த சில மாதங்களாக மூலவைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழைக்கான சூழலும் மாறிவிட்டது. இதனால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துவருகிறது.
வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு வழியாக துரைச்சாமிபுரம் தடுப்பணை வரையும் கிடைக்கும் நீர் வரத்து பின்னர் படிப்படியாக வற்றி விடுகிறது. மூல வைகை ஆறு மூலம் தற்போது வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. ஆற்றில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் உறை கிணறுகள், விவசாயக் கிணறுகள், போர்வெல்களிலும் நீர் சுரப்பு குறைந்துள்ளது. ஆற்றை ஒட்டி உள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.