பெரியாறு அணையில் மீண்டும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு - * நீர்மட்டம் 136 அடியை எட்டுமா
பெரியாறு அணையில் மீண்டும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு - * நீர்மட்டம் 136 அடியை எட்டுமா
ADDED : ஜூன் 26, 2025 02:03 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மீண்டும் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் இம்முறையாவது நீர்மட்டம் 136 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு வாரத்துக்கு முன்பாகவே மே 23ல் துவங்கியது. கனமழையால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து ஜூன் 2ல் 130 அடியை கடந்தது. அதன்பின் மழையின்றி நீர்வரத்து குறையத் துவங்கியது. இதனால் நீர்மட்டம் ஜூன் 14ல் 128.2 அடியாக குறைந்தது. அதன் பின் பருவமழை இரண்டாவது முறையாக தீவிரமடைந்ததால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் ஜூன் 21ல் 132.45 அடி வரை எட்டியது. நீர்மட்டம் 136 அடியை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மழை குறைந்து நீர்வரத்தும் குறைந்தது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 34.4 மி.மீ., தேக்கடியில் 31.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு 1252 கன அடியாக இருந்த நீர்வரத்து 2260 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் சற்று உயர்ந்து 132.80 அடியானது(மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு நீர்த்திறப்பு 689 கன அடியில் இருந்து 1867 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் இருப்பு 5352 மில்லியன் கன அடியாகும். லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 62 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 166 ஆக அதிகரிக்கப்பட்டது.
எதிர்பார்ப்பு
பருவமழை தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இடுக்கி மாவட்டத்தில் இன்று கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் 136 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாய உள்ளனர். 'ரூல் கர்வ்' விதிமுறைப்படி ஜூன் 30 வரை அணையில் 136 அடி நீர் தேக்கலாம்.