மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 07:36 AM
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களின் கனமழை பெய்வதாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் ராமச்சந்திரன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் மழையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில், நேற்று கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் இருந்து, பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில், பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி, நீலகிரி, கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம், 118.84 அடியை அடைந்துள்ள நிலையில், 75,000 கன அடி முதல் 1.25 லட்சம் கன அடி வரை உபரி நீர், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும். இது, மேலும் அதிகரிக்கக் கூடும் என, நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்படுவதை தொடர்ந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட கலெக்டர்களுக்கு, ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவ மழை காரணமாக, பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 365 வீரர்கள், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில், முன்கூட்டியே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்பு படைகள், தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். பேரிடர் தொடர்பான தகவல்களை, துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள், 24 மணி நேரம் கூடுதலான அலுவலர்களுடன் செயல்படுகின்றன.
இம்மையங்களை முறையே 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாகவும், 94458 69848 என்ற வாட்ஸாப் எண் வழியாகவும் தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

