சென்னையில் மழையை கணிக்க ரூ.68 கோடியில் புது தொழில்நுட்பம் நீர்வளத்துறை செயலர் தகவல்
சென்னையில் மழையை கணிக்க ரூ.68 கோடியில் புது தொழில்நுட்பம் நீர்வளத்துறை செயலர் தகவல்
ADDED : அக் 26, 2024 07:42 AM
சென்னை: ''சென்னை மற்றும் புறநகரில், மழையை கணிப்பது தொடர்பான புதிய தொழில்நுட்ப பணிகள் நான்கு மாதங்களில் நிறைவு பெறும்,'' என, நீர்வளத்துறை செயலர் மணிவாசன் பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'தெற்கு அலை' என்ற பெயரில், நீர் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவது தொடர்பான தென் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம், சென்னை வேளச்சேரியில் நேற்று நடத்தப்பட்டது.
இதை துவக்கி வைத்து, மணிவாசன் பேசியதாவது:
தமிழகத்தில் நீர் தொடர்பான இரண்டு விதமான பிரச்னைகள் உள்ளன. சில நேரங்களில் நமக்கு தேவையான நீர் கிடைப்பதில்லை.
சில நேரங்களில் மழை அதிகமாக பெய்வதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தற்போது, மழை எங்கு, எவ்வளவு பெய்யும் என்பதை துல்லியமாக கணிக்க முடிகிறது.
ஆனால், தென்மேற்கு பருவமழையை விட, வடகிழக்கு பருவமழையை கணிப்பதில் சிரமம்உள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நடவடிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக, எதிர்பார்த்ததை விட அதிகமாகவோ, குறைவாகவோ மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மழையை துல்லியமாக கணிக்கக்கூடிய அளவுக்கு, புதிய தொழில்நுட்பத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை கணிப்பு தொடர்பான தகவல்கள், அரசுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 68 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இப்பணிகள், அடுத்த நான்கு மாதங்களில் நிறைவு பெறும்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், எந்த இடத்தில், எந்த அளவிற்கு மழை பொழிவு இருக்கும்; ஏரிகளில் எவ்வளவு கொள்ளளவு நீர் உள்ளது; வரத்து எவ்வளவு இருக்கும் என்ற விபரங்களை பொது மக்களே தெரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் தேங்குமிடம்
சென்னை மற்றும் புறநகரில் வெள்ள பாதிப்பை தடுக்க, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இணைந்து, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, கனமழை பெய்தால் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என்ன? எந்தெந்த இடங்களில் எவ்வளவு மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் என்பதை, தொழில்நுட்ப ரீதியாக அறிந்து தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.