ADDED : அக் 26, 2025 02:20 AM
சென்னை: பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை செயலர் வெளியிட்ட அறிக்கை: வைகை அணையில் இருந்து, வைகை பூர்விக பாசன பகுதி மூன்றுக்கு நாளை முதல் 31ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு 62.4 கோடி கன அடியும், வைகை பூர்விக பாசன பகுதி இரண்டுக்கு, வரும் நவம்பர் 2 முதல் 6ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு 77.2 கோடி கன அடியும், வைகை பூர்விக பாசன பகுதி ஒன்றுக்கு, நவம்பர் 8 முதல் 13ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு 42.8 கோடி கன அடி என மொத்தம் 182.4 கோடி கன அடி தண்ணீர் திறக்கப்படும்.
வரும் 2026 மார்ச் வரை வைகை அணையில், வைகை பங்கீட்டு நீர் 135.4 கோடி கன அடி எட்டும் போதெல்லாம், வைகை பூர்விக பாசன பகுதி 1, 2, 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 என விகிதத்தில் தண்ணீர் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

