மீனவ மகளிருக்கு கடன் வழங்க ரூ.25 கோடியில் 'அலைகள்' திட்டம்!
மீனவ மகளிருக்கு கடன் வழங்க ரூ.25 கோடியில் 'அலைகள்' திட்டம்!
ADDED : ஏப் 04, 2025 05:14 AM

சென்னை : ''மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு, நுண்கடன் வழங்க வசதியாக, 25 கோடி ரூபாயில், 'அலைகள்' திட்டம், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வழியாக செயல்படுத்தப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
* காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், 16 கடலோர மீனவ கிராமங்கள், 32 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். இக்கிராமங்களில், மீன் இறங்குதளம், வலைபின்னும் கூடம், சூரிய ஒளி மீன் உலர்த்தி என, மீனவர்களுக்கான மற்ற வாழ்வாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும்
* மீனவ மகளிருக்கு நுண்கடன் வழங்க, 25 கோடி ரூபாய் மூலதனத்தில், 'அலைகள்' திட்டம், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள
கூட்டுறவு இணையம் வழியாக செயல்படுத்தப்படும்
* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி; கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மற்றும் துாத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள், 45 கோடி ரூபாயில், பசுமை மீன்பிடி துறைமுகங்களாக மேம்படுத்தப்படும்
* நாட்டின மீன் இனங்களை பெருக்கி பாதுகாக்க, 1.20 கோடி ரூபாய் செலவில், ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும்
* தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்கள், நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்க, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், 'கயல்' திட்டம் துவக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், தேவைப்படும் இடங்களில், புதிய சில்லரை மீன் விற்பனை நிலையங்கள் உருவாக்கப்படும்
* பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் இயந்திரங்கள் வாங்க, 10.80 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்
* திருவள்ளூர் மாவட்டம், அவுரிவாக்கம், கீழ்குப்பம் மற்றும் வல்லம்பேடுகுப்பம் கிராமங்களில், புதிய மீன் இறங்கு தளங்கள், 9 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு, 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்க, 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்
* கடலுார் மாவட்டம் புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், 11 கோடி ரூபாயில், மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் அமைக்கப்படும்
* மீன்கள், மீன் உணவுப் பொருட்கள் இருப்பு, விலை, சந்தை நிலவரம் அறிய, 'இ - மீன்' வலைதள சேவை, 50 லட்சம் ரூபாயில் உருவாக்கப்படும்
* தீவிர மீன் வளர்ப்பு முறையில், நீர்த்தேக்கங்களில் மிதவை கூண்டுகள் அமைத்து, மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம், 7.70 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
* அலங்கார மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும், மீன்வள கண்காட்சிகள், 74 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்
* நாகப்பட்டினம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 200 நாட்டுப்படகு மீனவர்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வாங்க, 40 லட்சம்ரூபாய் மானியம்வழங்கப்படும்
* நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கிராமத்தில், கடல் அரிப்பு தடுப்பு பணிகள், 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
* செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம், துாத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை, அண்ணா காலனி, திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமங்களில், மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்
* சென்னை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டத்தில், 45 லட்சம் ரூபாய் செலவில், மீன் கழிவு மறு சுழற்சி ஆலைகள் அமைக்கப்படும்
* மீன் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்
* தமிழகத்தில் வளர்க்கப்படும் மீன் வகைகளில், ஒரு மீன் வகையை, மாநில மீனாக அடையாளம் கண்டு, அதன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டிற்கானதிட்டம், 50 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்
* பாகு மீன் மற்றும் கொடுவா மீன் குஞ்சு உற்பத்தி மையங்கள், கிருஷ்ணகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
* சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில், 5 கோடி ரூபாயில் சுழல் நிதி உருவாக்கப்படும். இவ்வாறு அவர்அறிவித்தார்.