'குழப்பமற்ற நிலைக்குத்தான் ஆட்சியில் பங்கு கேட்கிறோம்-' *புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
'குழப்பமற்ற நிலைக்குத்தான் ஆட்சியில் பங்கு கேட்கிறோம்-' *புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
ADDED : ஜூலை 22, 2025 12:24 AM
ராஜபாளையம்; குழப்பமற்ற நிலைக்கு தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறோம், என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சியின் மாநில மாநாடு, தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியது: கட்சி தொடங்கியதில் இருந்து மதுவிற்கு எதிரான பரப்புரை செய்து வருகிறோம்.
கள்ளுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை தடை செய்தால் தான் மக்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை தடுக்க முடியும். தமிழகத்தில் டாஸ்மாக் திறந்த பின் கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களின் உடல் நலம், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.
ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் சர்வாதிகார போக்குடன் கனிம வளங்களை கொள்ளையடிக்கிறார்கள். அமைச்சர்கள் எடுக்கும் முடிவு மற்றவர்களுக்கு தெரிவதில்லை. கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இணையும் போது தான் ஆளுங்கட்சிக்கு கடிவாளம் போட முடியும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி மலரவும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்லவும் கூட்டணி ஆட்சி அவசியம்.
பட்டாசு விபத்துக்கள் தடுக்கப்படக்கூடியது தான். அதிகாரிகள் ஊழலை தவிர்த்தால் சிவகாசியில் பட்டாசு விபத்துக்கள் நேராமல் தடுக்கலாம். இவ்வாறு கூறினார்.