'மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப சட்ட போராட்டத்தை சந்திக்கிறோம்'
'மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப சட்ட போராட்டத்தை சந்திக்கிறோம்'
ADDED : நவ 12, 2024 03:25 AM
சென்னை: “அரசு மருத்துவமனைகளில், பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மை தான்; அவற்றை நிரப்ப சட்ட போராட்டங்கள் நடத்தப்படுகின்றன,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 2025 - 26ம் ஆண்டுக்கான மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மருத்துவ தேர்வு
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
சட்டசபையில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை சார்ந்த திட்டங்கள், அதில் எஞ்சியுள்ள திட்டங்கள் குறித்தும், வரும் நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மருத்துவ துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பது போன்ற மாய தோற்றத்தை, எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்ஸ்களுக்கு, நிரந்தர மற்றும் தற்காலிக பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் பணியாற்றிய 1,271 ஒப்பந்த நர்ஸ்களை நிரந்தரம் செய்வதற்கான ஆணைகள், வரும், 14, 15ம் தேதிகளில் வழங்கப்படும்.
மேலும், கொரோனா காலத்தில் பணியாற்றிய, 954 நர்ஸ்கள், ஒப்பந்த நர்ஸ்களாக பணியாற்றவும் ஆணை வழங்கப்படும். இது முடிந்ததும், 300 நர்ஸ் பணியிடங்களை, மருத்துவ தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வழக்கு
இதன் வாயிலாக, நர்ஸ்களுக்கான காலி பணியிடங்கள், 100 சதவீதம் இல்லாத நிலை உருவாக்கப்படும்.
தற்போது, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 1,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள், பொது சுகாதாரத் துறையில் 1,353 பணியிடங்கள்; மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், 552 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், முதுநிலை படித்து முடித்த டாக்டர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவர். மருத்துவ துறையில் காலியிடம் இருந்தாலும், அவற்றை நிரப்ப பல்வேறு சட்ட போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட நியமனம் தொடர்பாக, பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கு முடிவுக்கு வந்த பின்தான், பணி நியமனம் மேற்கொள்ள முடிகிறது.
தற்போது, 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு, வரும் ஜன., 27ம் தேதி 'ஆன்லைன்' தேர்வு நடத்தப்படும். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்புமாறு, மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.