களவாடப்பட்ட ரூ.20,000 கோடி திரும்ப கொடுக்க கோரி போராடுகிறோம் சி.ஐ.டி.யு., ஆவேசம்
களவாடப்பட்ட ரூ.20,000 கோடி திரும்ப கொடுக்க கோரி போராடுகிறோம் சி.ஐ.டி.யு., ஆவேசம்
ADDED : ஆக 23, 2025 01:34 AM
சென்னை:''போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்களிடம் இருந்து களவாடப்பட்ட, 20,000 கோடி ரூபாயை திரும்ப கொடுக்க கோரி போராடுகிறோம்,'' என, சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.
போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18ம் தேதி முதல் மாநிலம் முழுதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் துவங்கியதும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன் வழங்க, ஒரு பகுதி நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. இதர கோரிக்கைகளை வலியுறுத்தி, 5வது நாளாக நேற்று, 22 இடங்களில், போராட்டம் நடந்தது. சென்னை, வடபழனியில் நடந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது: போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்களிடம் இருந்து களவாடப்பட்ட, 20,000 கோடி ரூபாயை திரும்ப கொடுக்க கோரி போராடுகிறோம். ஓய்வு பெற்று செல்கிறவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்கள் மறுக்கப்படுகிறது.
ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ காப்பீடும், அரசு தர மறுக்கிறது. அனைவருக்கும் பழைய ஓய்வூதியம், வாரிசு வேலை கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட எட்டு அரசாணைகளை நீக்க மறுக்கிறது. அரசுக்கு நான்கு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில்தான் போராட்டம் நடக்கிறது.
தீபாவளிக்கு முன், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லா விட்டால், கருப்பு தீபாவளி கொண்டாடும் நிலை உருவாகும். எனவே, எத்தனை வாரமானாலும் காத்திருப்பு போராட்டம் தொடரும்; சிறை வைத்தாலும் அங்கேயும் போராட்டம் நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.