சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாரில்லை: அமைச்சர் முத்துசாமி
சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாரில்லை: அமைச்சர் முத்துசாமி
ADDED : ஜன 27, 2025 03:33 AM
ஈரோடு: ''சீமானிடம் பிரச்னை செய்ய நாங்கள் தயாராக இல்லை,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, அமைச்சர் முத்து சாமி பிரசாரம் செய்தார். மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் கொண்டு வந்த திட்டங்களின் மீதான வீரியம், பிரசாரத்துக்காக மக்களை சந்திக்கும் போது தெரிகிறது. எங்கள் சிறப்பு திட்டங்கள் பற்றி சீமான் பேசுவது பற்றி விளக்கம் தர தயாரில்லை. அதே நேரம் சிறப்பு திட்டங்கள் குறித்த மக்கள் கருத்தை முக்கியமாக கருதுகிறோம்.
பொதுவாக, சீமான் பேசுவதற்கு அத்தனை உரிமையும் உண்டு. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாங்கள் குறுக்கே நிற்கவோ, பிரச்னை செய்யவோ தயாராக இல்லை. சீமானின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஈ.வெ.ரா., குறித்து பேசுவதற்கு, தேர்தல் முடிந்த பின் கருத்து கூறுவோம்.
கடந்த ஆட்சியில் நிதி நிலை மோசமாக வைத்துச் சென்றதால், அதை சரி செய்வதுடன், தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க., நிறைவேற்றியுள்ளது. தற்போதைய அரசு கடன் வாங்குவது, திட்டங்களை செயல்படுத்துவதற்காக தான்; வீணடிப்பதற்காக அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

