sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!

/

கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!

கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!

கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லையே!

40


UPDATED : மார் 08, 2025 11:14 PM

ADDED : மார் 08, 2025 11:11 PM

Google News

UPDATED : மார் 08, 2025 11:14 PM ADDED : மார் 08, 2025 11:11 PM

40


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கூட்டணி அமைப்பதற்காக, எந்த கட்சியும் எங்களை நோக்கி வரும் என, அ.தி.மு.க., ஒருநாளும் காத்திருக்கவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி; நோட்டாவோடு போட்டி போடும் கட்சி என விமர்சித்தவர்கள், இன்று கூட்டணிக்காக தவம் கிடக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது' என, அ.தி.மு.க.,வை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, இப்படி பதிலளித்துள்ளார் பழனிசாமி.

கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., இணைந்து போட்டியிட்டது. தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; அ.தி.மு.க., எதிர்க்கட்சியானது.

இதையடுத்து, அக்கட்சிக்குள் இருவிதமான கருத்துகள் பரவின. 'பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலை சந்தித்ததாலேயே, சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை.

'அதுவே தோல்விக்கான பிரதான காரணம்' என ஒரு தரப்பும், 'அப்படியெல்லாம் இல்லை; பத்தாண்டு காலத்துக்கு அ.தி.மு.க., ஆட்சி நீடித்ததால், மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதனாலேயே, அ.தி.மு.க., கூட்டணி தோல்வியை தழுவியது' என, மற்றொரு தரப்பும் கூறின.

ரகசிய கருத்துக்கணிப்பு


இதையடுத்து, தமிழகம் முழுதும் கட்சி தொண்டர்கள் கருத்தை அறிய முயன்ற பழனிசாமி, தனியார் ஏஜன்சி வாயிலாக ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன்பின், 'சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காததாலேயே கட்சியும், கூட்டணியும் தோல்வியை தழுவின' என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார்.

அதற்கேற்ப, கட்சியின் மூத்த தலைவர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலரும், பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க, பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது.

அடுத்து வந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அல்லாத வலுவான கூட்டணியை கட்டமைக்க முயன்ற பழனிசாமியின் எண்ணம் ஈடேறவில்லை. தே.மு.தி.க.,வை மட்டும் வைத்துக் கொண்டு, தேர்தலை எதிர்கொண்டார் பழனிசாமி.

அந்த தேர்தலிலும் கட்சிக்கு பலத்த அடி விழுந்ததும், நிலைகுலைந்து போனார். ஆனாலும், 'பா.ஜ.,வுடன் ஒட்டோ, உறவோ எக்காலத்திலும் கிடையாது' என்று தொடர்ந்து பேசி வந்தார். அதனால், தோல்வியை தவிர்க்க, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களை, அ.தி.மு.க., புறக்கணித்தது.

நிரூபித்தது


இந்நிலையில், பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, லோக்சபா தேர்தலில் களமிறங்கிய பா.ஜ., 18.5 சதவீத ஓட்டுகளை பெற்று, தமிழகத்தில் தன் சக்தியை நிரூபித்தது.

அதற்குப்பின், மீண்டும் பா.ஜ.,வோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் தான், அ.தி.மு.க.,வுக்கு இனி எதிர்காலம் என்ற கருத்து, அ.தி.மு.க.,வினரிடம் ஆழமாக வேர் விட்டது.

பழனிசாமியை சுற்றி இருக்கிற மூத்த நிர்வாகிகளும், இந்தக் கருத்துக்கு உடன்பட்டதும், பழனிசாமி ஸ்ருதி குறைந்து, பா.ஜ., கூட்டணியே வேண்டாம் என்ற வாதத்தை தவிர்த்தார். 'ஆறு மாத காலத்துக்குப் பின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்' என்று கூறத் துவங்கினார்.

பா.ஜ.,வோடு கூட்டணி அமைக்கும் தன் எண்ணத்தை மறைமுகமாக, பழனிசாமி இப்படி தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. அதற்கு தான் அண்ணாமலை அப்படி பதில் சொல்லியிருந்தார். 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி; நோட்டாவோடு போட்டி போடும் கட்சி என விமர்சித்தவர்கள், இன்று பா.ஜ., கூட்டணிக்காக தவம் கிடக்கும் சூழல் உருவாகி இருக்கிறது' என்றார்.

பதிலடி


இதற்கு, ''கட்சி துவங்கிய காலத்தில் இருந்து, கூட்டணிக்காக தவம் கிடந்த வரலாறு, அ.தி.மு.க.,வுக்கு இல்லை,'' என, பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று உலக மகளிர் தின விழா நடந்தது.

அதில் பங்கேற்ற பின், பழனிசாமி அளித்த பேட்டி:

பா.ஜ., கூட்டணிக்காக தவம் கிடக்கின்றனர் என, அ.தி.மு.க.,வை குறிப்பிட்டு அண்ணாமலை சொல்லவில்லை; தவறாகப் பேசாதீர்கள். தேவையின்றி அவதுாறு பரப்ப வேண்டாம். போட்டு வாங்க வேண்டாம். கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்குப் பின் பேசப்படும் என, ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன்.

அ.தி.மு.க., பலமிக்க கட்சி. 1972ல் கட்சி துவங்கியதில் இருந்து இன்றுவரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்தது இல்லை; அந்த வரலாறே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த பழனிசாமி, இப்போது, ''அ.தி.மு.க.,வை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை,'' என்று கூறி சமாளித்தாலும், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடப்பது போன்று, பொதுவெளியில் அண்ணாமலை பேசியதில் கடும் எரிச்சலில் உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தற்போதுள்ள அரசியல் சூழலில், தி.மு.க.,வை தோற்கடித்தால் தான், அ.தி.மு.க., என்ற கட்சியே நிலைக்க முடியும். அதற்கு வலுவான கூட்டணி தேவை.

தி.மு.க., கூட்டணியில் இருந்து, எந்தக் கட்சியும் வர தயாராக இல்லை. விஜயின் த.வெ.க.,வும் தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறது. எனவே, பா.ஜ., - பா.ம.க.,வுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை அ.தி.மு.க.,வுக்கு உள்ளது.

அதனால், பா.ஜ.,வுடன் மோதல் போக்கை தவிர்க்கும் வகையில், பழனி சாமி கருத்து தெரிவித்து உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us