2021ல் கொடுத்ததை வாங்கினோம்: 2026ல் நடக்காது : அது அந்த காலம்
2021ல் கொடுத்ததை வாங்கினோம்: 2026ல் நடக்காது : அது அந்த காலம்
UPDATED : ஜூன் 11, 2025 09:46 AM
ADDED : ஜூன் 10, 2025 11:30 PM

சென்னை: 'கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கொடுத்ததை வாங்கிக் கொண்டோம்; அது அந்த காலம். வரும் 2026 தேர்தலில் அது நடக்காது' என, தி.மு.க., கூட்டணியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதை, முதல் முறையாக வெளிப்படையாகக் கூறி உள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி:
தி.மு.க., தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை அரவணைத்து செல்வது அவசியம். தற்போதுள்ள ஒற்றுமையை கட்டிக் காப்பாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளை மதிப்பதில், தி.மு.க.,வை குறை சொல்ல முடியாது; ஆனால், இது நீடிக்க வேண்டும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டோம். ஆனால், குறைவாக தந்தனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால், தி.மு.க., ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றோம்; மனப்பூர்வமாக ஏற்கவில்லை.
கட்சி வரலாற்றிலேயே மிகக்குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டது, அதுதான் முதல் முறை. அதுவே கடைசியாகவும் இருக்க வேண்டும். இனி அவ்வாறு தொடரக் கூடாது. தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி செய்தால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் பா.ஜ., பரவலாக காலுான்றி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது மாறிவிட்டது. அந்த கட்சி வலுவடைந்துள்ளது. வளர்ந்து வரும் பா.ஜ.,வின் மத அரசியலுக்கு எதிரான போராட்டத்தையும் நாம் நடத்த வேண்டியுள்ளது.
மதுரையில் நடக்க இருப்பது, முருக பக்தர்கள் மாநாடு அல்ல; அது அரசியல் மாநாடு. அ.தி.மு.க., இன்னும் சுதாரிக்கவில்லை என்றால், சில ஆண்டுகளுக்குப்பின், அ.தி.மு.க., என்ற கட்சி பெயர் மட்டுமே இருக்கும். பல மாநிலங்களில், மாநில கட்சிகளை அழித்தது தான் பா.ஜ., வரலாறு என்பதை அக்கட்சி உணர வேண்டும்..இவ்வாறு சண்முகம் கூறினார்.
சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. அத்தனை இடங்களில் தி.மு.க., நிற்பதானால், கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை தான் கொடுக்க முடியும்.
இது தெரிந்துதான், காங்கிரஸ், வி.சி.,யை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளிப்படையாக குரல் எழுப்பியுள்ளது. கடந்த முறை, 6 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டில் வெற்றி பெற்றது இக்கட்சி.