ஹிந்துக்கள் ஒற்றுமையால் ஒன்று திரண்டதால் தான் திருப்பரங்குன்றம் என அழைக்கிறோம் : பா.ஜ., தாமோதர்ஜி பெருமிதம்
ஹிந்துக்கள் ஒற்றுமையால் ஒன்று திரண்டதால் தான் திருப்பரங்குன்றம் என அழைக்கிறோம் : பா.ஜ., தாமோதர்ஜி பெருமிதம்
ADDED : நவ 08, 2025 02:03 AM
திருப்பரங்குன்றம்: ''ஹிந்துக்கள் ஒற்றுமையாக ஒன்று திரண்டதால்தான் இன்று நாம் திருப்பரங்குன்றத்தை, திருப்பரங்குன்றம் என அழைக்க முடிகிறது,'' என, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., ஆன்மிகம், கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதர்ஜி பேசினார்.
இப்பிரிவு சார்பில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி பெருங்கோட்ட மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இப்பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதர்ஜி பேசியதாவது:
ஹிந்து கோயில்களில் ஆக்கிரமித்து கடை வைத்திருப்போர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். திருப்பரங்குன்றத்தில் ஒரு பிரச்னை ஏற்பட்ட போது அனைத்து ஹிந்துக்களும் ஒற்றுமையுடன் திரண்டனர். ஹிந்துக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்று திரண்டதால்தான் இன்று நாம் திருப்பரங்குன்றத்தை, திருப்பரங்குன்றம் என அழைக்க முடிகிறது.
இது போல் தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக எந்த பிரச்னை நடந்தாலும் ஒன்று திரள வேண்டும். நாம் ஆன்மிகத்தை பரப்ப வந்தவர்கள் அல்ல. ஆன்மிகத்தை காப்பாற்ற வந்தவர்கள்.
கோயில்களில் பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். செய்து கொடுக்க முடியவில்லை என்றால் பா.ஜ., ஆன்மிக பிரிவிடம் தெரிவியுங்கள். நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபத்தை ஏற்றலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அறநிலையத்துறை அங்கு தீபம் ஏற்ற மறுக்கிறது. இது சம்பந்தமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்.
தீர்ப்பு வந்த பின்பு அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும் என்றார்.
மாநில செயலாளர்கள் சிவ பிரபாகரன், சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இணை அமைப்பாளர் நெல்லையம்மாள் வரவேற்றார். பா.ஜ., மாநில பொது செயலாளர் சீனிவாசன், பெருங்கோட்ட செயலாளர் கதலி நரசிங்கபெருமாள், அமைப்பு செயலாளர் ராமசேகர், மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம், ராஜசிம்மன், சக்கரவர்த்தி, அமைப்பாளர் லெனின் அண்ணாமலை, மண்டல தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

