போலீஸ் அணுகுமுறையில் கோளாறு இருப்பதால் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம்: திருமாவளவன்
போலீஸ் அணுகுமுறையில் கோளாறு இருப்பதால் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம்: திருமாவளவன்
ADDED : ஜன 29, 2025 09:13 PM
திருச்சி:''வேங்கைவயல் விவகாரத்தில், போலீஸ் அணுகுமுறைகளில் இருக்கும் கோளாறுகள் தான், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதனால் தான், இன்னொரு வாய்ப்பாக, சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம்,'' என்று வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானத்தில் வந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரு தரப்பு புகார்களையும் பெற்று முறைப்படி விசாரணை நடத்தாமல், பாதிக்கப்பட்டவர் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்வது வாடிக்கையானது தான்.
பல இடங்களில், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பட்டமான படுகொலையாக இருந்தால் கூட, அதை படுகொலையாக ஏற்பதில்லை. 174 சி.ஆர்.பி.சி., என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை என்ற பெயரில் இழுத்தடித்து, ஒன்றும் இல்லாமல் செய்து விடுகின்றனர். இது ஒன்றும் புதிய அணுகுமுறை அல்ல.
வேங்கை வயலில் விவகாரத்தில், புலன் விசாரணையில் கிடைத்த ஆதாரம் என்ற அடிப்படையில், அப்போது வெளியிட்ட ஆடியோவையும், வீடியோவையும் தான் இப்போதும் வெளியிட்டுள்ளனர். டி.என்.ஏ., பரிசோதனை நடத்தியதில் என்ன ஆதாரம் கிடைத்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்தோம், என்பதை போலீசார் தெளிவுபடுத்தவில்லை. வழக்கு விசாரணையில் காலதாமதமாவது பற்றி கேட்டபோது தான், டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம், என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவலை கசிய விட்டனர்.
இன்றைக்கு, டி.என்.ஏ., பரிசோதனை அடிப்படையில் தான் இந்த நிலைப்பாடு எடுத்தார்களா? என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் பற்றி புகார் அளித்த கனகராஜ் என்பவரின் மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், என்பது உண்மை.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், அப்போது வெளியிட்ட ஆடியோவையும், வீடியோவையும், படங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளனர்.
தாயும், மகனும் உரையாடியதை முன்னே, பின்னே இருந்தவற்றை வெட்டி விட்டு, 'அடித்தாலும், உதைத்தாலும் நீ ஒத்துக்கொள்ளாதே,' என்று அந்த தாய் சொல்வதை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
'நீ அதில் சம்பந்தப்படவில்லை. ஆனால், உன்னை அச்சுறுத்துகின்றனர். அடிக்கிறார்கள் என்பதால் நீ பயந்து கொண்டு, அந்த குற்றத்தை ஒத்துக்கொள்ளாதே' என்று தான் அந்த தாய் அறிவுரை சொல்லியிருக்கிறார். 'அடிக்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்பதற்காக செய்யாத குற்றத்தை ஒத்துக் கொள்ளாதே' என்ற பொருளில் தான் அந்த அம்மா பேசியிருக்கிறார்.
ஆனால், அதைத்தான் ஆதாரம் என்கிறது சி.பி.சி.ஐ.டி., போலீஸ். இது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
இந்த அடிப்படையில் தான் அந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்ள வேண்டாம், என்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.
அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் குற்றம் செய்தவர்களை தீர்மானித்திருக்கிறோம் என்றால், அதை ஏன் பொது வெளியிலோ, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ தெளிவுபடுத்தக் கூடாது?
புகார் அளித்தவருக்கு சொல்லாமலேயே எப்.ஐ.ஆர்., திருத்தப்படுகிறது. அவருக்கு எந்த தகவலும் தரப்படவில்லை.
இந்த அணுகுமுறைகளில் இருக்கும் கோளாறுகள் தான், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதனால் தான், எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, இன்னொரு வாய்ப்பாக, ஏன் சி.பி.ஐ., விசாரணை செய்யக் கூடாது, என்று கேட்கிறோம். கருத்தியல், அரசியல் பொருத்தம் இல்லாத விஷயங்களை பரபரப்புக்காக, சீமான் பேசுகிறார்.
இளைஞர்களின் உணர்ச்சிகளை அரசியல் பயணத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். ஈ.வெ.ரா.,வின் வெங்காயம் தான், இந்த மண்ணில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் நடக்கின்றன. இல்லை என்று சொல்ல முடியாது. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழகம் சுமூகமான முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

