ADDED : மார் 22, 2025 04:12 AM
சென்னை : ''ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். எங்கள் மீது தி.மு.க., கரிசனம் காட்டத் தேவையில்லை. எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.
சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில், 4.52 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு உள்ளது. அதை பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
மேலாண்மை குழு
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்ததும், கடன் படிப்படியாகக் குறைக்கப்படும். வருவாய் உயர்த்தப்படும். நிதி மேலாண்மை சரி செய்யப்படும்' என்றனர். ஆட்சி பொறுப்பேற்ற பின், நிதி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது; நிபுணர்கள் இடம் பெற்றனர்.
ஆனால், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற செய்தி எதுவும் இல்லை.
நிதி மேலாண்மை குழு அமைத்த பின்தான், 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். தமிழக மக்கள் மீது கடனை சுமத்தியது தான், இந்த அரசின் சாதனை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், எவ்வளவு தொழிற்சாலைகள் வந்துள்ளன என, வெள்ளை அறிக்கை கேட்டோம்; பதில் இல்லை. அனைத்தும் நாடகமாக உள்ளது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்தினால் போதும். அ.தி.மு.க.,வின் கூட்டல், கழித்தல் கணக்கு பற்றி அவர் கவலைப்பட தேவையில்லை.
நிரந்தரமானது
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அது, எங்களுக்கு தெரியும். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். எங்கள் மீது தி.மு.க., கரிசனம் காட்டத் தேவையில்லை. எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நீங்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தீர்கள் என்று, எண்ணிப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, கொள்கை வேறு, கூட்டணி வேறு.
தேர்தல் வரும்போது, ஓட்டுகளை ஒன்று சேர்த்து, எதிரிகளை வீழ்த்த சேருவது கூட்டணி. கொள்கை என்பது நிரந்தரமானது. கூட்டணி ஒவ்வொரு முறையும் மாறும். எங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகள், தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ளன.
தி.மு.க., தான் எதிரி
அ.தி.மு.க., ஒருபோதும் தன்மானத்தை இழக்காது. தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டிய அரசு. அதுதான் எங்கள் நிலைப்பாடு. மற்றவர்கள் எதிரி இல்லை.
கட்சி ரீதியாக பார்க்கிற போது, தி.மு.க., தான் எதிரி. மக்கள் துரோக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தி.மு.க., இன்று காங்கிரசோடு கூட்டணி வைத்துள்ளது. 'எமர்ஜென்சி' காலத்தில், 'மிசா' சட்டத்தில் கைது செய்த கட்சியோடு, கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க., விழித்து கொண்டது. தி.மு.க., எவ்வளவு வார்த்தை ஜாலம் பேசினாலும், அ.தி.மு.க., மயங்காது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சி அகற்றப்படுவது உறுதி.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.