ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்: முதல்வர் தகவல் முதல்வர் ஸ்டாலின் தகவல்
ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்: முதல்வர் தகவல் முதல்வர் ஸ்டாலின் தகவல்
UPDATED : ஆக 30, 2025 09:57 AM
ADDED : ஆக 30, 2025 05:37 AM
சென்னை : “ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு, ஒருவார பயணமாக செல்கிறேன். தமிழகத்திற்கு, 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை ஈர்த்துள்ளோம்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ மகள் ராகவி - -சச்சிந்தர் திருமணம், சென்னை நீலாங்கரையில் நேற்று நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் உரிமைக்காக, என்.ஆர்.இளங்கோ, ராஜ்யசபாவில் ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில், வழக்கறிஞர்கள் அணியை தயாராக வைத்திருப்பார். ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கு பயிற்சியும் வழங்கி கொண்டிருக்கிறார்.
பீஹார் மாநிலத்தில், சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை, நான் அதிகம் விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதற்காகவே, ராகுல் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. பீஹார் நிலை தமிழகத்தில் ஏற்படக்கூடாது.
இப்போதே நாம் விழிப்புணர்வு பெற்று, அதை தடுப்பதற்கு தயாராக வேண்டும். உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஈ.வெ.ரா., படத்தை திறந்து வைக்க உள்ளேன்.
இன்று, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒருவார பயணமாக செல்கிறேன். இதுவரை, தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை ஈர்த்துஉள்ளோம்.
வெளிநாட்டு பயணங்களின் போது, முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை பார்க்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

