'மக்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி தேவைகளை நிறைவு செய்துள்ளோம்!'
'மக்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி தேவைகளை நிறைவு செய்துள்ளோம்!'
ADDED : பிப் 13, 2024 04:01 AM
சென்னை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 'தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம் - 2024' என்ற சட்ட முன்வடிவு, நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
அரசின் அயராத முயற்சி காரணமாக, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை, தமிழகம் கண்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில், நான்காம் இடத்திலிருந்த தமிழகம், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
நிடி ஆயோக்கின், 2022ம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டின்படி, நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்த, அரசு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
நவீன விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, அரசால் வடிவமைக்கப்பட்ட பெருந்திட்டங்கள், திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க உகந்த சூழலை உருவாக்குகிறது. அத்துடன் உலகளாவிய விளையாட்டு அரங்கில், நம் மாநிலத்தை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவதற்கும் வழிவகுக்கும்.
நடவடிக்கை
குற்ற செயல்களை தடுப்பதில், அரசு சமரசமற்ற அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலான, திராவிட மாடல் ஆட்சி முறையை பின்பற்றுவதில், அரசு உறுதியாக உள்ளது.
விளிம்பு நிலை சமூகங்களை மேம்படுத்துவது, அரசின் தார்மீக கடமை மட்டும் அல்ல; மக்களின் உரிமை என்று அரசு நம்புகிறது. இதை கருத்தில் வைத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 'தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம் - 2024' என்ற சட்ட முன்வடிவு, நடப்பு கூட்டத்தொடரில் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டு பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்னைகளில் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
சிறந்த மாநிலம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், நதி நீர் பங்கீட்டிற்கான அறிவியல் ரீதியான கணக்கீட்டை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.
உயர் கல்வி நிறுவனங்களை, உயர் சிறப்பு மையங்களாக தரம் உயர்த்துவதில், அரசு கவனம் செலுத்தி வருகிறது. புத்தொழில்களையும், புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பையும் வளர்ப்பதற்காக எடுக்கப்பட்ட, அரசின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப் இந்தியா 2022' தரவரிசையில் தமிழகம் சிறந்த செயலாற்றும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
அரசு பதவியேற்றது முதல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி, அவர்களது தேவைகளையும் நிறைவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.