மூடுவிழாவை நோக்கி செல்லும் நமக்கு நாமே திட்டம்: பன்னீர்
மூடுவிழாவை நோக்கி செல்லும் நமக்கு நாமே திட்டம்: பன்னீர்
ADDED : ஆக 20, 2025 06:32 AM

சென்னை: தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட, 'நமக்கு நாமே' திட்டம், மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஒரு திட்டத்தை துவங்கினால் மட்டும் போதாது; அத்திட்டம் தொடர்ந்து மக்களை சென்றடைகிறதா என்பதை, அரசு தரப்பில் கண்காணிக்க வேண்டும்.
அப்போதுதான் அத்திட்டம் வெற்றி அடையும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தொடர் கண்காணிப்பு என்பதே, எந்த திட்டத்தின் மீதும் இல்லை.
இதனால், 'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை தொடர்ந்து, நமக்கு நாமே திட்டமும் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகின்றன.
கடந்த 2021- - 22ல், 148 கோடி ரூபாயில், 926 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த 2024 - -25ல், நமக்கு நாமே திட்டத்தில், 30 கோடி ரூபாயில், 74 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்திற்கே இந்த கதி என்றால், மற்ற திட்டங்களை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.