மாற்றத்தை நோக்கினோம்; ஏமாற்றமே மிச்சம் நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகல்
மாற்றத்தை நோக்கினோம்; ஏமாற்றமே மிச்சம் நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகல்
ADDED : டிச 12, 2024 08:15 PM

நாகப்பட்டினம்:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கை பிடிக்காமல், அக்கட்சியின் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அக்கட்சியில் இருந்து விலகி வருவது தொடர்கிறது.
கட்சியில் இருந்து விலகியோர், தி.மு.க., - அ.தி.மு.க., என பலவேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். பலர், ஒன்றிணைந்து சீமானுக்கு எதிராக புது இயக்கம் ஒன்றை துவங்கி, திருச்சியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதோடு, மாவீரர் தின நிகழ்ச்சியையும் நடத்தினர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை, கீழ்வேளூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர்.
நாகையில், நாம் தமிழர் கட்சியின் சட்டசபை தொகுதி தலைவர் அகமது, பொருளாளர் நாகராஜன், இளைஞர் பாசறை இணை செயலர் பிரவீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் அளித்த பேட்டி:
தமிழ் தேசியம் மீதான ஈடுபாடு காரணமாகவும், திராவிட அரசியலை எதிர்த்தும், தமிழர் ஒருவர் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற கனவோடு, கடந்த 2019ல் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தோம்.
சீமான் உத்தரவுப்படி அரசியல் களத்தில் களமாடியதால், குடும்பத்தை விட்டு பிரிந்தோம்; வருவாய் இழந்தோம். தகுதிக்கு மீறி செலவழித்தோம். மாவட்ட பொருளாளராக பொறுப்பு மட்டுமே நாகராஜனிடம் இருந்தது. கட்சியின் நிதி மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிதிகள் அனைத்தும் சீமானுக்கு நெருங்கிய மண்டல பொறுப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்தது.
நிர்வாக பிரச்னைகளை சுட்டிக்காட்டியதற்காக, நாகை சட்டசபை தொகுதி தலைவர் அகமது, பொருளாளர் நாகராஜனை கட்சியை விட்டு சீமான் நீக்கினார்.
மேடையில் மீனவர்கள் பிரச்னைக்காக பேசும் சீமான், மீனவ சமுதாயத்துக்கு எதிராக நடக்கிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக பேசும் சீமானை நம்பி ஏமாந்தது போதும் என முடிவெடுத்து, நாகை, கீழ்வேளூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி விட்டோம். அடுத்தடுத்தும் பலர் விலகுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.