தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'கல்வி உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்'

'கல்வி உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்'

'கல்வி உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்'


ADDED : ஜன 22, 2025 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'மாநில உரிமைகளை காக்க, நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்' என, அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மக்களாட்சியையும், மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக, ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்துள்ள பல்கலைகளை எல்லாம் யு.ஜி.சி., வாயிலாக கைப்பற்றி, நம் கல்வி வளர்ச்சியை தடுக்க முயல்கிறது மத்திய அரசு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைகள் மீது, மாநில அரசுக்கே எந்த உரிமையும் கிடையாது என கூறுவது, சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன. மாநில அரசுகளை மிரட்டிப் பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது. கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவு பட்டியலில் உள்ளபோது, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை.

மத்திய அரசின் யு.ஜி.சி., விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது; யு.ஜி.சி., திட்டங்களில் பங்கேற்க முடியாது. பல்கலைகளின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் அறிவித்திருப்பது, தமிழக மாணவர்களின் கல்வி மீது நேரடியாக தொடுக்கப்பட்ட போர். மத்திய அரசின் இந்த செயல், தமிழகத்தின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் மீதான தாக்குதல்.

அதனால்தான் முதல்வர் ஸ்டாலின், 'பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்கள் தமிழகத்துடன் இணைந்து, இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிராகரித்து, சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் ஒன்றிணைந்து, நம் கல்வி நிறுவனங்களின் மீதான மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

அதன்படியே கேரள அரசும், யு.ஜி.சி., வரைவறிக்கைக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளை காக்க, ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி, கூட்டாட்சிக்கு குழி பறிக்கும் யு.ஜி.சி., வெளியிட்ட வரைவு அறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us