எங்களுக்கு தேவை 'கோவை ரயில்வே கோட்டம்'; ரயில்வே அமைச்சரிடம் பல்வேறு அமைப்பினர் முறையீடு
எங்களுக்கு தேவை 'கோவை ரயில்வே கோட்டம்'; ரயில்வே அமைச்சரிடம் பல்வேறு அமைப்பினர் முறையீடு
ADDED : நவ 05, 2024 04:47 AM

கோவை: 'கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் ஏற்படுத்த வேண்டும்' என, ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.
கேரளா மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வை முடித்த ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். அவரை பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து, கோவையின் ரயில்வே தேவைகள் குறித்து மனு அளித்தனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்; நல்லாம்பாளையத்தில் ரயில் பராமரிப்பு பணிமனை ஏற்படுத்த வேண்டும். மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில், பழநி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும். கோவை - ராமேஸ்வரம், கோவை - திருச்செந்துார் இடையே புதிய ரயில்கள் இயக்க வேண்டும். போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை கோவை தெற்கு சந்திப்பு என, பெயர் மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அப்போது, இந்திய தொழில் வர்த்தக சபை, கொங்கு குளோபல் போரம், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு, சிங்காநல்லுார் ரயில் பயணிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்தனர்.
புதிய கோட்டம் உருவாக்குங்க!
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந் சார்பில் அளித்த மனுவில், 'மிக பழமையான போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், 1862ல் துவங்கப்பட்டது. ராயபுரம், திருச்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக துவங்கப்பட்ட பழமையான ரயில்வே ஸ்டேஷன். சேலம், மதுரை, பாலக்காடு கோட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து, கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும்' என கூறியுள்ளார். இதே கோரிக்கையை பல்வேறு அமைப்பினரும் தெரிவித்திருந்தனர்.
போத்தனுாரில் நிற்கணும்
பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் அளித்த மனுவில், 'போத்தனுாரில், கோவை - மங்களுரு - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - துாத்துக்குடி - கோவை வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நின்று செல்ல வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.