உயிரை கையில் பிடித்தபடி 3 கி.மீ., ஓடி வந்தோம்: துப்பாக்கி சூட்டில் தப்பிய செஞ்சி சுற்றுலா பயணியர் அதிர்ச்சி தகவல்
உயிரை கையில் பிடித்தபடி 3 கி.மீ., ஓடி வந்தோம்: துப்பாக்கி சூட்டில் தப்பிய செஞ்சி சுற்றுலா பயணியர் அதிர்ச்சி தகவல்
UPDATED : ஏப் 25, 2025 08:48 AM
ADDED : ஏப் 25, 2025 06:23 AM

செஞ்சி : செஞ்சியில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் தாக்குதல் நடந்த போது அங்கிருந்து 3 கி.மீ., துாரம் மலைப்பாதையில் தப்பியோடி வந்த தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அப்பம்பட்டை சேர்ந்தவர் சையத் உஸ்மான், 45; மீனம்பூரைச் சேர்ந்த சாதிக், 42; ஷபி ரஹ்மான், 28; சையத் ரஹ்மான், 42; செஞ்சியைச் சேர்ந்த சையத் காஜா பாஷா, 55; ராஜா, 44; ஆகிய 6 பேர் ஏப். 19ம் தேதி இரவு ஜம்மு சென்றனர். மறுநாள் காலை அனந்த்நாக் சென்றனர்.
அங்கிருந்து 2 நாட்கள் காஷ்மீரை சுற்றிப் பார்த்துள்ளனர். ஏப். 22ம் தேதி காலை அனந்த்நாக்கில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பஹல்காம் சென்றனர். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து குதிரை மூலம் சுற்றுலா தலத்திற்கு சென்றனர். அந்த பகுதியை சுற்றி பார்த்து விட்டு மதியம் 2;15 மணியளவில் மீண்டும் குதிரை ஏறும் இடத்திற்கு வந்தனர்.
அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. முதலில் ஏதோ பட்டாசு வெடிப்பதாக கருதியுள்ளனர். அங்கிருந்த குதிரைக்காரர்கள், துப்பாக்கி சூடு நடக்கிறது உயிர் பிழைக்க வேண்டுமானால் தப்பியோடுங்கள் எனக் கூறியுள்ளார்.
மிக அருகில் துப்பாக்கி சத்தம் கேட்டதும் 6 பேரும் சேறும் சகதியுமான கரடு முரடான பாதையில் உயிரைக் கையில் பிடித்த படி 3 கி.மீ., துாரம் ஓடி வந்து மலையில் இருந்து கீழே வந்தனர். பின்னர் அங்கிருந்து அனந்த்நாக் வந்துள்ளனர்.
இது குறித்து சையத் உஸ்மான் கூறுகையில், 'சுற்றுலா தலத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். துப்பாக்கி சூடு நடந்தபோது அதே இடத்திற்கு மிக அருகில் இருந்தோம். பெரும்பான்மையான சுற்றலா பயணிகள் துப்பாக்கி சூடு நடப்பதை அறியாமல் இடத்தை ரசித்து கொண்டிருந்தனர். 10 நிமிடம் முன் தாக்குதல் நடந்திருந்தால் நாங்களும் சிக்கி இருப்போம்.
தாக்குதல் நடந்த போது போலீசாரும், ராணுவத்தினரும் அங்கு இல்லை. மலையில் இருந்து கீழே இறங்கும் போது எதிரே போலீசாரும், ராணுவத்தினரும் சென்றனர். நாங்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனந்த்நாக் வந்து விட்டோம்.
அங்கிருந்து தமிழக அரசின் உதவி எண்ணுக்கு போன் செய்தோம். 4 மணி நேரத்தில் தமிழக அரசின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஸ்தாப், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். அவர், ஸ்ரீநகர் சாலையில் பிரச்னை எதுவும் இல்லை நீங்கள் ஸ்ரீநகர் சென்று டில்லி செல்லலாம் என கூறினார். எந்த உதவி என்றாலும் தொடர்பு கொள்ளும் படி தெரிவித்தார். டில்லி வரும் வரை தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர்.
இன்று (நேற்று) டில்லி வந்ததும். எங்களுக்கு உணவு கொடுத்து தங்க வைத்தனர். மாலை டில்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்து விடுவோம்' என்றார். இச்சம்பவம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 6 சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ராஜா, கோணை, அப்பம்பட்டு பகுதி வி.ஏ.ஓ.,வாக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

