ஆப்பரேஷன் புளூஸ்டார் குறித்து கருத்து சிதம்பரத்திடம் தான் கேட்க வேண்டும்: கார்த்தி எம்.பி., பேட்டி.
ஆப்பரேஷன் புளூஸ்டார் குறித்து கருத்து சிதம்பரத்திடம் தான் கேட்க வேண்டும்: கார்த்தி எம்.பி., பேட்டி.
ADDED : அக் 13, 2025 11:43 PM

சிவகங்கை: ' ஆப்பரேஷன் புளூ ஸ்டார் குறித்து சிதம்பரம் கூறியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்' என அவரது மகனும் சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி கூறினார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்னை நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டது. நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு சொல்வார்கள்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த மருந்து தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தால் அரசும் , துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அரசும் இது குறித்து விசாரணை நடத்தி மக்களுக்கு விரிவான அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கரூர் சம்பவம் குறித்து ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 'புளூ ஸ்டார்' ஆப்பரேஷன் குறித்து சிதம்பரம் கூறியது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அது 1984 ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து 'ஆபரேஷன் பிளாக் தண்டர்' நடந்தது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
காரைக்குடி வந்துள்ள பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செட்டிநாடு விருந்து சாப்பிட்டு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழகத்தில் கூலிப்படை தொடர்பான கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டு வீசியது போன்ற சம்பவங்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.