நீர்நிலை பாதுகாப்பில் கேரளாவை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்
நீர்நிலை பாதுகாப்பில் கேரளாவை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்
ADDED : மார் 21, 2025 04:26 AM

திண்டிவனம்: திண்டிவனம், தைலாபுரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:
'நெல் விளையும் நிலங்களை பாதுகாக்கும் வகையில், நெல் வயல்களை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்ற அனுமதிக்க மாட்டோம்; நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க முடியாது' என, கேரள அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால், தமிழகத்தில் முப்போகம் விளையும் நிலத்தையும் கூட, அதிகாரிகளை சரிகட்டினால், அடுத்த ஆறு மாதங்களில், அந்த நிலைங்களை வீட்டு மனைப் பட்டாவாக மாற்ற முடியும்.
அதே போல், சிப்காட் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசே விளைநிலங்களை கையகப்படுத்துகிறது. இதனால், தமிழகத்தில் சாகுபடி பரப்பு 40 லட்சம் எக்டேர் பரப்பளவும், 15,000 ஏரிகளும் மாயமாகின.
தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில், தமிழக அரசு கேரளாவை பின்தொடர வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 450 நாட்கள் பணி செய்த ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை செயல்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
அரசியல் கட்சிகள் சமூகத்தின் அங்கம். மக்களின் நலனுக்காகத்தான் அரசியல் கட்சிகள் பாடுபடுகின்றன. பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.